இணைந்த இதயம்

Monday, March 6, 2017

பெட்ரோல்கடல்


மீன்கறிக்கு உமிழ்நீர் சுரக்கிறது குழந்தை 
வாங்கிட ஆளின்றி கொண்டு வந்த மீனைக்
கொண்டு போகிறான் வேலப்பன்
வறள் உப்பு வாசக் காற்று
பெட்ரோல் கவிச்சியை கொண்டு சேர்க்கிறது
மீன்சந்தை தோறும் கண்ணீர்கதையாடல் 


சேவையின் மீது நம்பிக்கை சேர்க்க உபகரணங்கள் எதுவுமின்றி
கடற்கறையில் கசிந்துருகிக் கிடக்கிறது வாலிபம்
விபத்தா சதியா மீவெளிப் பகிர்வுகள் பார்வைக்கு வருகின்றன
கப்பல் மீது குற்றப்பத்திரிகை உண்டா
எழுகின்றன கேள்விகள்
சுவாசச்சிக்கலால் இறந்து மிதக்கின்றன கடலினங்கள்
இருந்து தொலைக்கின்றன அரசுகள்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...
தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

Sunday, March 5, 2017

திரைக்காதலன் பாலுமகேந்திராஇயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளர் ரோஸ்லின் பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் போன் செய்து, 13 ஆம் தேதி நம்ம சாரோட மூணாவது நினைவுநாள். வரணும் என்றார்.அவசியம் வருவேன் என்று பிப்ரவரி 13 காலை 11 மணிக்கு சென்னை ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டர் 1  சென்றேன். போகும் பொழுது இயக்குநர் பாலுமகேந்திரா  குறித்த டாக்குமெண்ட்ரி( இயக்கம் வசந்த்) ஓடிக் கொண்டிருந்தது.ஒன்றரை மணிநேரம் ஓடியது டாக்குமெண்ட்ரி.அருமையான முயற்சி.

பின்னர் பாலுமகேந்திரா குறித்த ஞாபகப்பதிவு. இதில் பாலுமகேந்திரா மகன் சங்கிபாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகர் அர்ச்சனா, ஓவியர் வீரசந்தனம், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, ஜூனியர் பாலையா, இயக்குநர் மீரா கதிரவன், நிழல் திருநாவுக்கரசு, இரா.தெ.முத்து,ரோஸ்லின் என் பங்கேற்றுப் பேசினோம்.

சங்கி தனக்கு  ”தன் அப்பா  நண்பர் ”   என்றார். சீனுராமசாமி ” தன் உதவியாளர்களை மிகுந்த தோழமையோடு நடத்தியவர் சார்’  என்று நெகிழ்ந்தார். ”தன் ஞானத்தகப்பன் பாலு சார்” என்று குறிப்பிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.நடிகை அர்ச்சனா பேசும் பொழுது “ சினிமாவில் பலரால் மறுக்கப்பட்ட சுதா என்கிற என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு வாழ்வும் முகமும் தந்தவர் சார் ” என்றார்.

  “பாலுவை மகத்தானக் கலைஞன் என்று கொண்டால் அவரின் பிறகுணங்கள் காணாமல் போகும் “ என்று விமர்சனங்களுக்கு பதில் தந்தார் வீர சந்தானம்.  ” பொருத்தமான பாத்திரங்களில் தன்னை நடிக்க வைத்தவர் பாலுமகேந்திரா” என்றார் ஜூனியர் பாலையா. “நானும் சாரின் மாணவர் “ என்று மகிழ்ந்தார் மீரா கதிரவன்.

 “பாலுமகேந்திராவிற்கும் எங்கள் தமுஎகச அமைப்பிற்கும் எனக்கும் முப்பதாண்டு நட்பு என்றும், எதையும் வெளிப்படையாக எங்களோடு விவாதித்து, உடன் நின்று செயற்படும் நல்ல நண்பர்; ஆசிரியர் என்றும், அவர் நடத்திய சினிமாப் பட்டறை கட்டிடத்தில் அவருக்கான படைப்புகளை அவர் புழங்கிய நூல்களைக் கொண்ட காப்பகம் ஒன்றை அமைக்க ஷங்கி உள்ளிட்டு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் காலத்திலேயே அழிந்து போன அவரின் சினிமாக்களை போல் அல்லாமல் , தமிழின் மிச்சமுள்ள சினிமா படைப்புகளை திரை ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் வைத்து தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன்

Monday, February 6, 2017

பேராலம்


காலம் சும்மா 
கடந்து போக 
அனுமதியேன்
பக்கம் பரபக்கம்  
கூராய்வித்தே
அனுப்புவேன்
அடி மேல் அடி
கண்ணீராற் நிரம்பிய
பெருந்துயர்
தழைப்பதற்கான
துளிர்விட்டே
சரிகிறது பேராலம்


மோடி வைக்கும் ஆப்புஎங்கள் ஹோம்மினிஸ்டர் காலையில் பேப்பரைப் பார்த்து 
” என்னங்க மோடீ பட்ஜெட்டுல ஒரு கோடி பேருக்கு வீடு கட்ட 23000 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்காராம. அதை வகுத்தா தலைக்கு எவ்வளவு வரும்னு சொல்லுங்க ” என்றார். 

கணக்குப் போட்டு “ 23000 ரூபாய் வருது ”என்றேன். ”23000 தில என்ன வீடு கட்ட முடியும்; இந்த ஆளு பன்றது ஒன்னும் சரியில்லையே. பாருங்க இந்தாளு 500 ஐயும் 1000ஐயும் ஒழிச்சாரு. நீங்க என்கிட்ட 3000 ரூபாய் கடன் வாங்கித் தராம இருக்கீங்க.” 

”இரண்டரை லட்சத்துக்கு மேல பேங்குல கல்யாணத்துக்கு காசு தர மாட்டாங்கிறான்னு பக்கத்தில சொன்னாங்க. அதுக்கு ஒவ்வோரு செலவுக்கும் வவுச்சர் வாங்கி பாங்குல தரணுமாம்.”

”நாம என்னா கல்யாணத்துல தங்கபாளமா ரெட்டிகாரு போல வாங்கி கொடுக்கப் போறோம். வர்ற ஆயிரம் பேருக்கு ஒரு வேள சோறு தரப் போறோம். அதுக்கும் ஆப்பு வைக்கிறானே இந்த மோடீ. ஒன்னும் சரியில்லங்க” என்று காலையில் பொரிந்து தள்ளிவிட்டுப் போனார்

முடிந்து போனதா காந்தி சகாப்தம்?


இது போன்றதொரு குளிர்காலம் அது. 1948 ஜனவரி 30 வெள்ளி மாலை 5 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகி விட்டதே என்ற பரிதவிப்பில் 79 வயதைக் கடந்த மகாத்மா காந்தி தன் பேத்திகளான அபா, மனு தோள்களில் மிதந்து வருகிறார்

.புல்வெளியின் குறுக்காக நடந்து மேடைக்கு வர நடக்கிறார். புஷ்கோட் அணிந்த உடல் பெருத்த அந்த நபர் நின்ற இடத்தில் ஒரு குழந்தை நின்றிருந்தால் கூட காந்தி மீதான குறி தப்பி இருக்காதுதான். காலை தொட்டு வணங்குவது போல வந்த நபர், தடுக்க வந்த அபாவை பெண்ணென்றும் பாராது தள்ளி சாய்த்து விட்டு, கால்சராயிலிருந்து பெனிட்டா ரக துப்பாக்கியை எடுத்து, மூன்று முறை காந்தியை நோக்கிச் சுட்டான். 

முதல் இரண்டு குண்டுகள் காந்தியின் வலதுமார்பை துளைத்தது. மூன்றாவது குண்டு காந்தியின் வலது பக்க வயிற்றை துளைத்தது. ஹே ராம் என்ற சொற்களை உச்சரித்தபடி புல்வெளியில் சாய்ந்து விழுந்தார் காந்தி. 

டெல்லி பிர்லா மந்திரின் மேல் ஒளிர்ந்த மாலை நேரச்சூரியன் யாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். கண நேரத்தில் மகாத்மாவின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ் சின் நாதுராம் கோட்சே நினைத்தான். 

எழுபது ஆண்டுகள், என்ன எண்ணாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரசிலிருந்து மதத்தை பிரிக்க எண்ணியவனின், சிறுபான்மை மக்களின் கேடயமாக விளங்கியவனின் , சிறுபான்மையை மதிக்கும் பெரும்பான்மையின் செயலே சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியின் சகாப்தம் முடியாது தொடரும். லால் சலாம் மகாத்மாஜி

மெரினா எழுச்சி மீதான அரசவன்முறை
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ :
கடந்த மூன்று நாட்களாக மனம் ஆலாய் அடித்துக் கொண்டிருகிறது. அரசுகள் பொய் பேசுகின்றன.அதிகாரிகள் பொய் பேசுகிறார்கள். ஊடகங்கள் பொய் பேசுகின்றன. மக்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த உண்மைகள் அம்பலம் ஏறாமல் காற்றில் கரைந்து விடுகின்றன.கடலோடிகள், தலித்துகள் அரசாங்கத்திற்கு அஞ்சாமல் எங்கள் பிள்ளைகளுக்கு களத்தில் கடலில் அரணாக நின்றார்கள்.குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் தந்து , கடற்புரத்தில் 23 ஆம் தேதி முழுக்க உடனிருந்தார்கள். அந்த மக்கள் மனம் கேளாமல் அலறித் துடித்துக் கொண்டு , எங்கள் பிள்ளைகளொடு தாயாக சகோதரியாக உடன் பிறந்தவர்களாக அவர்கள் களத்தில் நின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் பற்றித் தெரியும்.ஆண்டைகள் பற்றித் தெரியும். இயற்கையின் பாதகங்கள் பற்றித் தெரியும். 

இன்று இரண்டு நாட்களாக அவர்கள் வீடுகள் அலைக்கழிக்கப்படுகின்றன. நள்ளிரவில் வீடு வீடாக சோதனைகள் நடக்கின்றன.அவர்களின் தொழிற்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன.அவர்கள் மொழியில் சொன்னால் ரவுடிப் போலீசுகள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி ரவுடித்தனம் செய்கின்றன.

தோழர்கள் களப்பணி செய்கிறார்கள். மனித உரிமைக் கமிசன் நடவடிக்கை கோரி மனு அனுப்பி இருக்கினறது. அந்த கடற்புரத்து மக்களின் ஓலம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டுக் கோரிய மாணவர் திரளோடு அந்த கடலோடி மக்கள் கலந்தது ஆதிக்க அரசிற்கு பிடிக்கவில்லை. அவர்களைத்தான் சமுக விரோதிகள் என்று தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் அடையாளப்படுத்தி, அரசுகளுக்கு பணிவிடை செய்து கொண்டு அறிவிக்கப்படாத தணிக்கையை செய்து கொண்டு இருக்கின்றன.

நேற்றும் இன்றும் இரவில் இந்தச் செய்திகள் யாவும் கேட்டு கேட்டு மனம் களைத்து சோர்வடைந்து போய் விட்ட உணர்வு ஓங்கி நின்றது.சேனல் மாற்றியப் பொழுது , மாடசாமி பாரதியிடம் அய்யா..அய்யா..நம்ம சிதம்பரம் அய்யா கோயம்புத்துர் ஜெயிலுல செக்கிழுக்கிறாகளாம்; சிவம் அய்யா சேலம் ஜெயிலுல கசையடி வாங்குகிறாளாம் என்பார். பாரதி பராசக்தியிடம் முறையிட்டு கண்ணீர் மல்கி வேண்டி பாடுவார் இந்தப் பாடலை : 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீறாற் காத்தோம் கருகத் திருவுளமோ
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ


பாரதிக்குப் பிறகு வந்த 95 ஆண்டு காலத்தில் நிலைமையில் மாற்றம் இல்லை.ஆணவத்தில் அதிகாரத்தில் பொய் பேசுவதில் உண்மைகளை மறைப்பதில் பரங்கிகாரர்களுக்கும் பன்னீர் , கிரிஜா  ஜார்ஜ் ,  விஜயேந்திர பிதாரி, அமல்ராஜ் போன்றோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வித்தியசம் உண்டு.  

அவர்கள் வெள்ளைக்கார கொள்ளையர்கள்; 
இவர்கள் உள்ளூர்க்கார கொள்ளையர்கள்

எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி...
அது 1982. நான் எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி, அரசியலை எதார்த்தத்துடன் உரசிப் பார்த்து இருந்த காலம். எட்டாவது படிக்கும் பொழுதே, திமுக கூட்டங்கள் கேட்கப் போவேன். திமுக என்றால் எனக்கு எம்.ஜி.ஆர் தான். பின் அவரைத் தொடர்ந்து அதிமுக போனேன்.எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் உண்மையோடும் வாழ்வொடும் உரசிப் பார்த்து, இந்தாள் வேஸ்ட் என்று முடிவுக் கட்டி, தேடலுடன் தனித்து இருந்த காலம். ஊர் குடும்பம் யாவும் வாத்தியார் பின்னாடி.நான் மட்டும் தனி. 

அந்த காலத்தில் செங்கொடி மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.வாழ்வின் ஈர்ப்பாக பேருரு கொண்ட அன்பின் ஈர்ப்பாக செங்கொடி இருந்து கொண்டிருக்கிறது. ஊரின் சிபிஐ எம் கட்சியில் ஆதரவாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.. அப்பொழுதுதான் ஊரில் திமுக பிரமுகரும் , பின்னாளில் திமுகவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, திரு.சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் இருந்த , அறிஞர் அண்ணா கல்லூரியில் மூட்டா தொடங்கி இருந்த நேரம். சங்கரலிங்கம் திமுக என்றாலும், கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை ஏற்பதில் அவருக்கு பெரும் சங்கடம் இருந்தது. அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருந்தார்.

நான் சிபிஐ எம்கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும், தமுஎசவில் தீவிரமாக இயங்கிய காலம். சங்கரலிங்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க நான் பேராசிரியர்களுக்கு ஊர்த் துணையாக இருந்த காலம். பேராசிரியர்கள் வெளியூர்காரர்கள். 

அந்த காலத்தில் சிற்பம் என்ற கையெழுத்து ஏடு நடத்திக் கொண்டிருந்தோம். நான் அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில், அறிஞர் அண்ணா கல்லூரி சாந்த சில பேராசிரியர்கள் குறிப்பாக ஜெயராமன் சார், அனந்தகிருஷ்ணன் சார் போன்றோரெல்லாம் இருந்தனர். அன்று 1982 ஜூலை சிற்பம் ஏட்டின் ஆசிரியர் குழுக் கூட்டம். எனக்கு மேற்சொன்ன சார்களைப் பற்றி தொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. கூட்டத் தொடக்கத்தில் நான் அவர்களைப் பார்த்து, உங்களை எப்படி அழைக்க என்று கேட்டேன்.தோழர் என்றார் ஜெயராமன் சார்.அதுவே தோழர் என நான் கேட்ட முதல் விளியும் என்றும் பரவசம் தரும் விளியும் ஆகும்.

நன்றி தோழர் பேராசிரியர் ஜெயராமன். நன்றி தோழர்அருணாசலம்

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டுப் போரட்டத்தில் இந்து தமிழ் நாளிதழ்

90 களிலிருந்து நான்  THE  HINDU வாசகர்.  தி இந்து தமிழ் தொடங்கிய பின் , தமிழ் இந்துவை தொடர்ந்து  வாசித்து வருகிறேன். இதன் , சமஸ் கட்டுரைகள், இலக்கியம், சினிமா, பெண்கள் பகுதியை ரசித்து வருகிறேன். நடுப்பக்க கட்டுரைகளை அதன் தேவை அவசியம் என கருதினால் படித்து வருகிறேன். இன்றைய 24.01.2017 இந்து தமிழ் வாசித்தேன்; அதிர்ச்சி அடைந்தேன். ஜல்லிகட்டுக் கோரி கடந்த ஒருவாரமாக சென்னை மெரினா கடற்கரை தொடங்கி தமிழ்நாடெங்கும் நடந்த மாணவர்களின் அமைதியான போராட்டம், நேற்று தமிழ்நாட்டு போலிசால் சென்னை போலிசால் தமிழ்நாட்டு அரசால் , ரத்தச்சகதியில் வன்முறையில் முழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இதனை சன் டிவி, நியூஸ் 18 போன்ற தொலைக்காட்சிகள் ,  தீக்கதிர் நாளேடு விரிவாகக் காட்டி எழுதி இருக்கின்றன
https://theekkathir.in/2017/01/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF

 இன்றைய தமிழ் இந்துவில் வெளியாயிருக்கும் செய்திகள், படங்கள் அமைதியாகப் போராடிய மாணவர்களை சமுகவிரோதிகள்,கலவரக்காரர்கள் என்றே அழைக்கிறது. அது வெளியிட்டப் படங்களில் ஒரு பக்கம் மாணவர்கள் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கிறது. அடுத்தப் பக்கத்தில் போலிஸ் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கின்றது.அதன் கடைசிப்பக்கம் கட்டுரை ஆர்.சிவா என்பவரின் பெயரில் வெளிவந்திருக்கின்றது. அந்தக் கட்டுரை அப்பட்டமான போலிஸ் கொடுத்த செய்தியாக , போலிஸ் ரிப்போர்ட்டாக வந்திருக்கின்றது. சமுகவலைத்தளங்களில் பொதுமக்களின் சொத்திற்கு போலிஸ் செய்த நாசங்கள் , வைத்த தீ  , வீடியோவாக பகிரப்பட்டு வருகின்றன. இது எதுவும் இந்து தமிழில் இல்லை
https://www.youtube.com/watch?v=MD31jBup2Xc


கடைசிப்பக்க கட்டுரையில் போலிஸ் அப்பாவிகள் போலவும் மாணவர்களை கலவரக்காரர்கள் என்றும் சமுக விரோதிகள் என்றும் குறிப்பிட்டு சிவா பெயரில் போலிஸ் ஆதரவு செய்தி அரைப்பக்கம் வந்திருக்கின்றது.  தலையங்கமும் இவ்வாறே மொண்ணையாக எழுதப்பட்டுள்ளது. ரஜினி, கமல் அறிக்கைகளும் பொதுப்பார்வை பார்த்து, மாணவர்களின் பக்க நியாங்களை மறுக்கின்றன. 6 நாட்கள் அமைதியாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில், திடீரென்று எப்படி சமுக விரோதிகள் புக முடியும் ?. அவர்கள் எவ்வாறு கலவரக்காரர்களாக மாறினர்?

அரசின் அவசரச்சட்டத்தை அமைச்சர் வழியாக அல்லது நீதிமான்கள் அரிபரந்தாமன், சந்துரு போன்றவர்கள் வழியாக திரண்டிருந்த மாணவர்களுக்கு தந்து படிக்கச் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அரசு, சட்டமன்றத்தில் அறிவித்திருந்தால் மாணவர்கள் அமைதியாக அரசின் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்களத்தை விட்டுச் சென்றிருப்பார்கள்.அரசு அவ்வாறு செய்யாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக கருதி போலிஸ் அறிவிப்பு வண்டி வழியாக போலிஸ்காரர்கள் பேசினால், எப்படி மாணவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?

17 ஆம் தேதி இருந்த உணர்வு அல்ல மாணவர்களின் 23 ஆம் தேதிய உணர்வு. அரசு போட்ட கணக்கென்ன? இது சில சினிமா ஆட்களால், சில ஆர் ஜேக்களால் என்.ஜி.ஓக்களால் திரட்டப்பட்டக் கூட்டம். அவர்கள் அரசின் சொல்லை கேட்டு போராட்டத்தை கைவிட்டதைப் போல மாணவர்கள்&இளைஞர்கள்&பெண்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று  அரசு நினைத்திருக்கிறது..மேற்சொன்ன நபர்களால் முதல் நாள் திரண்டு வந்தாலும், வந்தவர்கள் முழு உணர்வு கொண்டு, ஜல்லிகட்டு தேவை என்றும், இதற்கான முழு அரசுச்சட்டம் தேவை என்றும் பீட்டா  PETA எதிர்ப்பு உணர்வோடும் வந்த தமிழ்க்கூட்டம். சொந்த செலவில் திரண்ட கூட்டம்.

களத்திற்கு வரச்சொன்னவர்கள் அரசின் கைக்கூலிகளாகப் போன பிறகு, தமிழ் உணர்வோடு திரண்ட கூட்டம் எவ்வாறு , தம் பண்பாட்டுக் கோரிக்கையை கைவிட்டு கலைந்து போகும்? இந்த உணர்வோடும் அரசு சட்டத்தின் மீதான சந்தேகத்தோடும் கலையாமல் இருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களோடு  அரசு பேசாமல் , அரசின் கைக்கூலிகள் அழைத்தால் வரவேண்டும்; அவர்கள் கைவிட்டுப் போனால், மாணவர்களும் கைவிட்டுப் போகவேண்டும் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதியின் சினிமா சூட்டிங் அல்ல.ஆர்.ஜே பாலாஜியின் மொக்கை காம்பியர் வேலை இல்லையே?

130 ஆண்டுகளுக்கு மேலான  பாரம்பரியம் கொண்ட இந்து குழுமம் அணுகி நுணுகிப் பார்த்து, மக்கள் தரப்பில், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பில் நியாயத் தரப்பில் நின்று செய்திகள் வெளியிட்டிருக்க வேண்டும்.இப்படி அரசின் போலிசின் தரப்பில் நின்று செய்தி வெளியிட்டிருக்கக் கூடாது.

Wednesday, November 9, 2016

தேசாந்திரியின் கதைதேசாந்திரியாக இவர் ஊர் ஊராகச் சுற்றியப் பொழுதில் சென்னையின் ஒரு மாலை நேரத்தில் கற்பகாம்பாள் அவின்யூவில் 2000 ஆவது ஆண்டில் சந்தித்தேன். சில வார்த்தைகள் பேசினோம். என்ன பேசினோம் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த காலத்தின் வெம்மை , வாழ்வின் அலைச்சல் , ஏமாற்றம் அவ்வாறு பேச வைத்திருக்கும்.அன்றிலிருந்து இன்று வரை அவர் மீதான அன்போடும் அவரின் எழுத்துகளோடும் எம் பயணம் தொடர்கிறது.
உயரத்திற்கு வந்த பின்பும் அவரிடம் தொடர்ந்து வெளிப்படும் தோழமை ; செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை ; எழுத்துகளை வாசித்து நம் கருத்துகளைச் சொல்லும் பொழுதில் அவர் முகத்தில் வெளிப்படும் புன்னகை ; வெளிப்படைத்தன்மை இவரை நம் எழுத்தாளர் என்று உறவுக் கொண்டாடச் சொல்லும். வாசிப்பின் எழுத்தின் மீதான அவரின் ஆளுமை, சுயமரியாதை அவரின் உயரத்தை அதிகரிக்கவே செய்யும்.
சோவியத் படைப்புகளின் மீது அவருக்கான ஈடுபாடு, அதற்காக ரஷ்ய மொழியைக் கற்றது, வீடு தேடிப் போவோரை வறவேற்று மணிக்கணக்கில் பேசும் உற்சாகம், அழுத்தம் திருத்தமாக சொற்களைப் பயன்படுத்துவது என்று அவரின் இருப்பு நம்மை வசீகரிக்கும்.
நேர் உரையாடலில் அவரோடு பேசும் பொழுது “என்..ன தோழர் “என்று குழந்தமையோடு கேட்கும் அந்த அணுகுமுறை மேலும் மேலும் அவரோடு நம்மை அய்க்கியமாக்குகிறது. ஒரு பொழுதும் தன்னை மற்றவர்கள் மீது நிறுவிக் கொள்ள மாட்டார். மாறாக இயல்பான அணுகுமுறையில் வசிகரித்துக் கொள்வார்.
அவர் மீது நம் கூடுதல் பிரியத்தின் காரணம் , இவர் நம் காலத்தின் புதுமைப்பித்தன் ; நம் காலத்தின் ஜெயகாந்தன். உழைப்பாளி மக்கள் மீது அக்கறையும் நேசமும் கொண்டவர் என்பதால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மீது பொங்குமாங்கடலென நம் நேசம் ததும்பி நிற்கிறது.
( சென்னை காமராசர் அரங்கில் நவம்பர் 07 அன்று நடைபெற்ற சோவியத் புரட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழாவில் பங்கேற்க வந்த எஸ்.ரா,உடன் டி.லட்சுமணன் & நாம் )

Saturday, October 29, 2016

தீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை

தீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடும் நாளாக இருந்து வந்தது. நராகசுரனை வதம் செய்த,  வெற்றியைக் கொண்டாடும் நாள் தீபாவளி என்கிற இந்துமதச்சாயம் பூசிய வரலாறு விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து (கி.பி 1500) நடைமுறைக்கு வந்தது.

 வடிவம் மாறாமல் இருக்கிறது. உள்ளடக்கத்தை மறைத்து விட்டு, தமக்கு தேவையான சரக்கை ஏற்றி வைத்து விட்டது இந்துமதம்.  இன்றளவும் தீபாவளி  நீடிப்பதற்கு காரணம், காலம்தோறுமான பொருள் உற்பத்தி சந்தையோடும் ,  உற்பத்தியாளர்களின் நலனோடும் இணைத்து, பொருளாதார மேம்பாட்டுச் சந்தைக்கும் உதவும்படி அமைத்தது ஆகும் .

இந்துமதம் என்கிற சொல்லாடல் கிபி 800 அளவில்தான் புழக்கத்திற்கு ஆதிசங்கரன் வழியாக வருகிறது. கிபி 800 முதல்  கிபி 1900 தொடக்க காலம் வரை, சமணம்,பவுத்தம், மீமாம்சம் போன்ற இந்திய தத்துவ இயலிற்கு முற்போக்கு பாத்திரம் வகித்த மரபுகளை அழிப்பதற்கான பெரும் போர் நடைபெற்றது.

களப்பிரர் காலம் தவிர ஏனைய சோழ, பல்லவ, விஜயநகரஅரசுகள், மக்கள் நலனை முன் வைத்து இயங்கிய,  மககள் மத்தியில் பெரும் வீச்சோடு விளங்கிய , முற்போக்கு மரபுகளை ஒழிக்க , கடும் அடக்குமுறைகளை அனல் புனல் வாதங்களை சிரச்சேதங்களை நடத்தியது.

வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கொள்கை சார்ந்த பார்வையே நிர்வாணம் என்றும், மோட்சம் என்பது இந்தப் புரிதலே தவிர , வாழ்வை வெறுக்கின்ற பிற்போக்கு சார்ந்த பார்வை மோட்சம் அல்ல என்றும் பார்வையை மக்கள் மத்தியில் விதைத்து சமணர்கள் வளர்ந்தனர்.

 உழவிற்கான கால்நடைகளை கொல்லக்கூடாது என்றும், சொத்தின் மீதான ஆசை தவிர்க்க வேண்டும் என்றும் எதையும் பகுத்து அறிய வேண்டும் என்று , சொத்துடைமைக்கு எதிரான கருத்தாடலாகஇயல்பில்  பவுத்தம்,சமணம், மீமாம்சம் இருந்ததால் அதை சகிக்க இயலாமல் ஒழிக்க ஆளும் சக்திகள் முனைந்தனர்.

மகாவீரரின் ஆளுமை இமயம் முதல் குமரி வரை பெரும் வீச்சோடு இருந்தது.அவர் நிர்வாணம் எனும் மகாஞானம் பெற்ற நாளை தீபங்கள் ஏற்றி கொண்டாடிய மரபு தேசம் எங்கும் இருந்தது.

 இந்துமதச்சாயம் பூசப்பட்ட இந்தத் தீபாவளிக்கு வயது 500  ஆகும்.
முற்போக்கு மரபுகளின் மீது நம்பிக்கையும், பிறப்பில் உயர்வு தாழ்வை கற்பிக்கும் இந்துமதத்தின் மீது விமர்சனப் பார்வையும் கொண்டவர்கள், தீபாவளியின் உண்மை வரலாற்றைப் புரிந்து கொண்டு, விடுபட்டு போன பகுத்து அறியும் மகாவீர மரபை ஞாபகம் கொள்ளும் பொருட்டு, வரலாற்றின் மீது புதிய ஒளியை பாய்ச்ச வேண்டும்.

இந்தப் பார்வையிலான தீபாவளியைக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Friday, August 26, 2016

சமகாலத்தின் சாட்சியம்:
வாதை நிரம்பியதாய் இருக்கிறது 
வாழ்க்கை

எதையொன்றைப் பிடித்துக் கரைசேர 
ஏலுமோவென கானல் காட்டுகிறது

நித்தியக் கணங்களை நினைந்து 
உதிர்ந்து போகும் புன்னகைகள்


எங்கும் கையேந்தும் விண்ணப்பங்கள்
ரம்பம் கொண்டு அருக்கின்றன


குறுக்கும் நெடுக்குமாய் அலைவுறும் பாதங்கள் 

சமகாலத்தின் சாட்சியமாகிறது

கொண்டாட்டமும் ஆவேசமுமாய் குமிழிடும் 

வெர்ச்சுவல் உலகம்
இடுகுறிகளில் கிடக்க


இடுகாடுத் தேடிப் பிணம் சுமந்து
கண்ணீரைப் படர்த்துகிறார்கள் ஏதிலிகள்


வாதையை மேலும் மேலும் கையளிக்கும்
அரசியல் தட்பவெட்பங்கள் 


புள்ளி விலகாத மைய அச்சில் 

தொடர்ந்து சுழல்க 

குடிமைச் சமுகத்தின்
கூக்குரல் ஓர்மைகள்


நன்றி: ரோகிணி , ரேவதி குமார்

Saturday, August 20, 2016

காடெல்லாம் பிச்சிப்பூவு
  https://www.youtube.com/watch?v=yg1uGOPHW-s
காடெல்லாம் பிச்சிப்பூவு....
கரையெல்லாம் செண்பகப்பூ..
கரையெல்லாம் செண்பகப்பூ...

இந்த வரிகளை எங்குக் கேட்டாலும் அப்படியே சொக்கி நின்றுப் பாடலைக் கேட்பேன். அப்படி சொக்குவதற்கு இரண்டு காரணம் உண்டு.

ஒன்று இளையராஜாவின் இசையிலும் குரலிலும் கேட்பது. தெம்மாங்குப் பாடல் வடிவில் மிக எளிமையாக இனிமையாகப் பாடி இருப்பார் ராஜா. அப்படியே மனசைப் பிசையும் இசை அது.

இரண்டாவது பிச்சிப்பூக் காடுகளைக் கன்ணாரக் கண்டவன். அந்தக் காடுகளில் ஓடியாடி விளையாடியவன்.தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் பிச்சிப்பூச்  செடிகளை , எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை,ஆரல்வாய்மொழி,வெள்ளமடம் போன்ற ஊர்களின் புன்செய் காடுகளில் , 75 க்குப் பிற்பாடு முதல் இன்று வரை பிச்சிப்பூ பயிர் செய்தல் நடந்து வருகின்றது.

வானம் பார்த்தப் பூமி என்பதால், முன்னர் சோளம்,கம்பு,வரகு, நிலக்கடலை,பருத்தி என பயிர் செய்த காலம் போய், பக்கத்து எல்லையான கேரளாவில் பூவிற்கு நல்ல கிராக்கி என்பதால், வயிற்றுப் பிழைப்பிற்கு என்று, முன் சொன்ன பயிர்கள் பயிரிடுதல் யாவும் பின்னுக்குப் போய், எங்கள் ஊரெங்கும் பிச்சிபூ காடு வளர்ந்து இன்று  பசியை ஓரளவுப் போக்கிக் கொண்டிருக்கிறது.

பிச்சிப்பூக் காடுகளில் தினசரி பூக்களை கொய்ய பெண்களும் சிறுவர்களும் போவார்கள்.அமுல் பால்பவுடர் டப்பா அளவிற்கு பூக்களைக் கொய்து தந்தால், 50 பைசா தருவார்கள். மாதம் குறைந்தது 15 ரூபாய் கிடைக்கும். காலையில் சூரியன் உதிக்கும் சற்று முன் காடுகளில் புகுந்து, காலை 7 வரை பூக்களை கொய்யலாம். அன்று வெளிச்சந்தையில் அரிசி கிலோ 2 ரூபாய் .இந்தக் காசில் 7 கிலோ அரிசி வாங்கலாம். சினிமா டிக்கெட் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை இருந்தது. வாரம் தோறும் ஊர் , டூரிங் டாக்கிசில் சினிமா பார்க்கலாம்.ரொம்ப ஆசை எனில் திருவனந்தபுரம் போய் செம்மீன்,சகாவு, மீனமாசத்தில் சூரியன் என்று பார்த்து வந்த நாட்களும் உண்டு.

அவன்தான் மனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள், புதிய அடிமைகள், கண் சிவந்தால் மண் ,சிவக்கும்,உதிரிப்பூக்கள், புதிய வார்ப்புகள், நினைத்தாலே இனிக்கும் ,அன்னக்கிளி, பூட்டாதப் பூட்டுகள்,கரையெல்லாம் செண்பகப்பூ, என்று இந்தக் காசில் தேடித் தேடி படம் பார்த்தது உண்டு.
இந்த பால்ய நினைவுகள் யாவையும் இந்தக் காடெல்லாம் பிச்சிப் பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ கிளர்த்தி விடும்.

எங்கள் நாஞ்சில் நாட்டின் ஆற்றுபாசனம் கொண்ட சென்பகராமன்புதூர், தாழக்குடி,தேரேகால்புதூர், வீரநாராயணமங்கலம்,அழகியபாண்டிபுரம்,பூதப்பாண்டி,ஒளவையார்மடம் போன்ற நீரோடும் கரைகளில், அல்லிகள் சிரிப்பதை,  சிவப்பும் வெண்மையும் பச்சையுமாக தாமரைகள் பூத்துக் கிடப்பதை, தாழம்பூ கரையெல்லாம் தனித்த மணம் வீசுவதை ,ஆங்காங்கு செண்பகப் பூக்கள் தாழை போலுமான வேறொரு மணம் பரப்புவதை யாவும் இந்தப் பாடல் வரிகள் கிளர்த்தி,உடல் எந்த ஊரில் எங்கிருந்தாலும் ,  பதின்பருவ மனம் அப்படியே காற்றில் ஏறி ,  நாஞ்சில் மண் போய் விடும்.

எங்கள் பகுதிகளில் தென்னை, கமுகு, வாழை, நெல் என செழித்துக் கிடப்பதை இந்தப் பாடல் , ஓர்மையில் கொண்டு வந்து நிறுத்தி, மயக்கம் தரும்.

  காடெல்லாம் பிச்சிப்பூவு..
.கரையெல்லாம் செண்பகப்பூ
சாய்ந்தாடும் நெற்கதிரே
சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஒட
ஓடுதடி என் மனசு

என்று கேட்கும் இந்தப் பாடல், இளையராஜாவின் இந்தப் பாடல், ஜி.என்.ரங்கராஜனின் இயக்கத்தில், கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் ,  1981 களில் கேட்ட இந்தப் பாடல் , என்றும் உடன் வந்து இழைந்து , மானுட சமுகத்தின் அன்பை நேசத்தை காதலை வாழ்த்தை சாரல் போலும் , தூவியபடி சொல்லிக் கொண்டே ஒலிக்கின்றது.

காடெல்லாம் பிச்சிப்பூவு
கரையெல்லாம் செண்பகப்பூ

Tuesday, August 16, 2016

நா.முத்துக்குமார் : ஞாபகத்தில் எழும் புன்னகைநா.முத்துக்குமார் என்ற இளைஞனை நான் 1998 ல் அறிந்தேன். அந்த இளைஞன்  அன்று , சு.ப.வீரபாண்டியன் அவர்களை ஆசிரியராகவும்    நா.அருணாசலம் அவர்களை பதிப்பாளராகவும் கொண்ட  , நந்தன் மாத இதழில்  செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்

98 செப்டம்பர்.11 பாரதி நினைவு நாளில் , சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் , வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , நாள் முழுவதும் கவிதைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து, கவிதைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளையில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் அடியாட்கள், பாரதி இல்லத்தில் நுழைந்து , இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டுக்,   கவிஞர்களை தாக்கி ரவுடித்தனம் செய்த, அந்தச் சம்பவம் வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது.

 பாரதி இல்லத்தில் நடந்தது  அனைத்தையும் உடனிருந்து பார்த்து,  நந்தன் இதழிற்கு முத்துக்குமார்  கட்டுரை எழுதினார்.  வண்ணதாசன், பா.ஜெயப்பிரகாசம், கந்தர்வன், சிகரம் செந்தில்நாதன், இரா.தெ.முத்து என இவ்ர்களின் கருத்துகளையும் தொகுத்து, 98 அக்டோபர் நந்தன் இதழில் மூன்று பக்கம் எழுதி இருந்தார். இது நா.முத்துக்குமாருனூடான முதல் சந்திப்பு. அன்றிலிருந்து தொடர்ந்து அவரோடு பழகி வந்திருக்கிறேன். பார்த்த இடங்களில் எல்லாம் புன்னகையுடன் அவர் பேசிய காட்சி ஞாபகத்தில் எழுகிறது.

பாலுமகேந்திரா சார் அலுவலகத்தில் , பின்னர் அவரின் சொந்த அலுவலகத்தில் என்று பார்த்து பழகி இருக்கிறோம். நா.முத்துக்குமாருடன் பேசும் பொழுதெல்லாம்  , தான் எழுதி வெளி வந்தப் படங்களின் பாடல்கள் அல்லது அவர் எழுதிய பத்திரிகைத் தொடர்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்பார். சில முறை அதற்கு என்னால பதில் சொல்ல இயலாது போனதும் உண்டு.  2009 ல்  அவரைக் காண , சாலிகிராம் கருணாநிதி சாலையில் இருந்த அவரின் அலுவலகம் போயிருந்தேன்.

மனம் விட்டுப் பேசினார் அன்று. தனக்கு வரும் பட வாய்ப்புகள் பற்றிப் பேசினார். பாடல்களின் வெற்றி , வருமானம் , செலவு என ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தன் குடும்பத்திற்கு உணவு, வாடகை, மருத்துவம் உதவி என  மாதம்  ஒன்றரை லட்சம்  தேவைப்படுகிறது. வருவதெல்லாம் செலவாகிறது தோழர் என்று எந்தக் கிரீடமும் சுமக்காமல் இயல்பாகப் பேசினார் நா.மு.  பையன் ஆதவன் ; ஒரு வயதாச்சு என்று  போட்டோவைக் காட்டினார். தொடர்ந்து தேவை ஒட்டி மொபல் வழி பேசுவோம்.

கடந்த 2016 பிப்ரவரி 14 அன்று பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் , ரோஸ்லின் ஒருங்கிணைத்த , பாலுமகேந்திராவின் இரண்டாமாண்டு நினைவு நாளில் நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ,நா.முத்துக்குமார் உடன் நானும் பங்கேற்றேன்.முதல் வரிசையில் நான், முத்துக்குமார், பாலுமகேந்திரா மனைவி அகிலா என அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

என் அருகில் முத்துகுமார் இருந்தார். தமுஎகச பற்றி ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன் பற்றி கேட்டார். புதிதாய் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அந்த நிகழ்வில் பாலுமகேந்திரா குறித்து வெகு அற்புதமாகப் பேசினார்.

தலைமுறைகள் சினிமாவில் தனக்கு மகனாக நடிக்க தன்னை பாலுமகேந்திரா  கேட்டார் என்றார்.தலைமுறைகள் சாரின் வாழ்க்கை தான் என்று பேசினார். பாலுமகேந்திராவின் நினைவை அடுத்த ஆண்டு முதல் பெரிய விழாவாய் நடத்தப் போவதாகச் சொன்னார். பேசி மீண்டும் வந்து அருகில் அமர்ந்தார்.கிளம்புறேன் தோழர்; அலுவலகம் வாங்க பேசுவோம் என்று சொல்லிப் போனார் நா.முத்துக்குமார்.

சினிமாவில் பலரைத் தொடர்ந்து பார்க்கிறோம்.பேசுகிறோம்.பழகுகிறோம். ஆனாலும் நா.மு  நா.மு தான். மனிதர்களை மதிக்கத் தெரிந்த கவிஞன்.
இனி முத்துக்குமாரை பார்க்க இயலாதோ....
( நா.முத்துக்குமாருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு சார்பான அஞ்சலி செலுத்துதல்.
2016 ஆகஸ்ட் 14 மாலை 4.30 மணி
படம்: ராமச்சந்தின் / தீக்கதிர் )

Thursday, August 11, 2016

விந்தன் : முற்போக்குச் சிந்தனை மரபு


விந்தன்,தமிழ்ஒளி என்கிற பெயர்களை நான் ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவதியின் கலையுலக அனுபவங்கள் நூலின் வழியாக தொடக்கத்தில் அறிந்து கொண்டேன்.விந்தன் பற்றிய வாசிப்பில்,வடசென்னையின் சூளை பட்டாளத்தை சார்ந்தவர் என்கிற ஈர்ப்பும் அடுத்து வந்திருந்தது.
தமிழ்ச் சமுகத்தில் விந்தனின் ஆளுமை என்கிற கட்டுரையில் பேராசிரியர் வீ.அரசு சொன்னது போல `நடைமுறை சமுக அனுபவங்களை தனக்கான அரசியல் புரிதலோடு எழுத்தில் பதிவு செய்தவர் விந்தன்.

அந்த அரசியல் என்ன?
தொடர்ந்து நாற்பது ஆண்டு காலம் எழுத்தில் இயங்கியவர் விந்தன்.அமைப்பு சாராத ஆனால் கம்யூனிஸ்டுகள் மீது முற்போக்காளர்கள் மீது மரியாதை கொண்ட படைப்பாளி விந்தன் என்பதை அவரின் எழுத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
1947 ல் விந்தன் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? என்கிற நூலின் முன்னுரையில் தான் யார் என்பதை, தனது பார்வை எது என்பதை சொல்லியிருக்கிறார்.

`என்னை எழுத்தாளன் என்று சொல்வதை விட,தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே பெருமையடைபவன்.என்றைக்காவது ஒரு நாள் இந்த நாட்டு அரசியல்,ஏன் உலக அரசியலே கூட தொழிலாளர்களின் கைக்குத்தான் வந்து சேரப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது என்று தன்னைப் பற்றிய முன்னுரையை நூலின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
பாலும் பாவையும் நாவலில் இடம் பெற்ற சகோதரி சரளாவிற்கு என்கிற கடித வடிவ முன்னுரையில் இப்படிக் காணக் கிடைக்கிறது:
`அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை.அவள் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவள் என்று குறிப்பிடும்பொழுது மட்டும்,எனக்கு அந்த இனத்தின்மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டிருக்கிறேன்

விந்தன் கதைகள் தொகுப்பில் ரிக்‌ஷாவாலா என்றொரு கதை.
காலச்சுழற்சியில் ரிக்‌ஷா இழுத்த காளிமுத்து, தன்மகன் கைலாசநாதர் கோவிலின் தர்மகர்த்தாவாகி காரிலிருந்து இறங்கி வருவதை,கோவிலின் பண்டாரத்தின் வழியாக அறிகிறான்.மனைவியைப் பிரசவத்தில் பலி கொடுத்து,சிறைவாசமிருந்து மீண்டு கோவில் தோட்டக்காரனாக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கும் காளிமுத்து,தன் மகன் கோவில் தர்மகர்த்தா என்று அறிந்து மகிழ்ச்சி கொள்ளாமல்,அவனோடு தன் வாழ்க்கையை கழித்துக் கொள்ளலாம் என்று நினையாமல் அதிர்ச்சியில் பட்டென்று இறந்து விடுகிறான்.

உயிர்விடுதல் என்கிற உத்தியின் வழியாக மகனே ஆனாலும் பணக்காரவர்க்கம் என்றதனால், அதனோடு இணைந்து வாழ்வதை விடவும் உயிர் நீப்பதே மேல் என்று காளிமுத்துவிற்கு சஞ்சலச் சாவை கொடுத்து விட்டு தன் பணக்காரவர்க்க எதிர்ப்பை கதையில் பதிவு செய்திருக்கிறார் விந்தன்.

மனிதன் இதழில் 1954 ல் விந்தன் எழுதிய காந்தியவாதி கதை,காந்தியம் பேசிக் கொண்டே அதற்கு முரணாக ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தோல்மண்டி துளசிங்கராயரைப் பற்றியது. தீபாவளிக்கு தீபாவளி ஊர்ப்பிள்ளைக்ளுக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்து, தயாளக்குணம் கொண்டவராக காட்டிக் கொண்ட துளசிங்கராயரின் உண்மைமுகம் இந்த தீபாவளியில் அம்பலமாகி விடுகிறது.தனது அன்பாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளை ஊர்பிள்ளைகளாக பாவித்து,வழக்கமாக அணியும் மேல்துண்டு கீழ்துண்டு கூட இல்லாமல்,அன்பாட்டிகள் மத்தியில் எளிமையின் உச்சிக்கே சென்று அம்மணமாகி நின்று வாய்மையும் தூய்மையும் வளர்த்தார் என்று காந்தியத்தையும் அது பேசி ஏய்த்த மனிதர்களையும் பகடி செய்திருக்கிறார் விந்தன்.

விந்தனின் தடங்கள்
பாலும் பாவையும் நாவலில் விந்தனின் மனவோட்டத்தை சிந்தனையைச் சொல்லும் சில இடங்களை பார்க்கும் பொழுது,தன்னை சுற்றி நிகழும் அரசியல்,சமுக,பண்பாட்டு நிகழ்வினூடாக விந்தன் பாத்திரங்களை அமைத்துக் கொள்வதிலும் அவர்களின் மொழியினூடாக தன் கருத்தை துலக்கப்படுத்தவும் செய்திருக்கிறார்.

கனகலிங்கம் அகல்யாவிடம் இந்திரன் போன்ற ஆட்களின் சுயநலம் குறித்துப்  பேசும் பொழுது `பிறர் தனக்கு உபயோகமாக மட்டும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறவனே இந்த காலத்தில் புத்திசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் அறியப்படுகிறார்கள்என்று சொல்லுமிடத்தில் அறிவு, பொதுநலம் இல்லாது காசு பணம் தேடி அலையும் சுயநலமாக மாறி நிற்கிறது என்ற விமர்சனத்தையும் விந்தன் பதிகிறார்.

அகல்யா மீதான காதலை வெறும் பண உறவாக மாற்றி அகல்யாவை கை விடும் பொழுது `உன்னை கடவுள் காப்பாற்றட்டும் என்று சொல்லிவிட்டு ஓடிய இந்திரனை விமர்சிக்கும் கனகலிங்கம்`அனேகமாக கடவுளை துணைக்கு அழைப்பவர்கள் அல்லது கடவுளுக்கு பயன்படுபவர்கள் பலரும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள்,கன்னக்கோல் திருடர்கள்,தூங்கும் பொழுது கழுத்தை அறுப்பவர்கள் என்ற உரையாடலின் வழியாக கடவுளின் இடம் எது? கடவுளை யார் ஏமாற்றுகிறார்கள்?கடவுள் உண்டா என்கிற கேள்வியையும் பாத்திரங்களினூடாக பதிந்து விடுகிறார்.

பாலும் பாவையும் நாவலின் 4 ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்தை வாசிப்பவர்கள், மகாகவி பாரதி மீதான விந்தனின் மரியாதையைப் புரிந்து கொள்ள முடியும்.தமிழை சொந்த சரக்காக மாற்றி அதன் வளர்ச்சியை முற்போக்கு வழியில் செலுத்த விரும்பாத இலக்கிய சனாதனிகள் மீதான கண்டனத்தையும் விந்தன் இந்த அத்தியாயத்தில் பதிந்திருப்பார்.
 தொழில் நிமித்தம் புத்தகக் கட்டுகளை தோளில் வைத்து சுமந்து வரும் கனகலிங்கத்திடம் அகல்யா`ஒரு கூலியாள் வைத்து கட்டுகளை கொண்டு வரலாமே;உங்களுக்கென்று ஒரு கெளரவம் உண்டுதானே என்று கேட்குமிடத்தில்  `அவரவர்க்கான சொந்தத் தகுதி பார்த்து வரும் கெளரவம் மட்டுமே மேலானது; கெளரவத்தை தேடிப் போகக்கூடாது;அது தானாய் வரவேண்டும் என்று தகுதி சார்ந்த கெளரவம் பற்றி கனகலிங்கம் வழியாக விந்தன் சொல்லுமிடம் அறிவுபூர்வமானது.

இந்தத் தரவுகளிலிருந்து விந்தனின் அரசியல் நோக்கு எது என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.அது முற்போக்குச் சிந்தனை சார்ந்ததாக இருக்கிறது.சமுகத்தின் முரண்பாடு குறித்ததாக இருக்கிறது.ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் பற்றியதாக இருக்கிறது.தொழிலாளி எதிர் முதலாளி  என்று இருக்கிறது.ஆளும் வர்க்க சித்தாந்த நோக்கை பகடி செய்வதாக இருக்கிறது.

வாழ்வின் மீது பின்னபட்ட படித்தவர்களின் சூதுவலைகள்;அவர்களின் பொதுநல தேட்டமில்லாத தன்னை மட்டுமே முன் வைக்கும் சுயநலம்;கடவுளின் வேர்;கடவுள் எவரின் கைக்கருவி; தமிழின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்தாத இலக்கிய செக்குதன்மை கொண்ட பழமைவாதிகள்;சொந்தத் திறமைகளினூடாக கிளைக்கும் தனிமனிதர்கள் மீதான மரியாதையை ஏற்பு செய்வதற்கு மாறாக மரியாதையின் அளவுகோலாக பணத்தை முன் வைக்கும் அபத்தம் என்று தனியுடைமை சமுகத்தின் கீழ் கிளைத்து பெருகும் நலிவுப் போக்குகள்;இதன் மீதான மாற்றுப் பார்வையுடன் கூடிய விமர்சனம் என்பதான தன்மையில் கருக்கொள்கிறது விந்தனின் முற்போக்கு சிந்தனை.

உண்மை துலங்கும் இடங்கள்
விந்தன் எழுத்து மீது ஒரு கேள்வி வந்து விழுந்தது.காதலைப் பற்றி விந்தன் எழுதுவது ஏன்?என்பதுதான் கேள்வி.விந்தன் சொன்னார்:`காதல் வெற்றி தோல்வி ஆவதும் கூட,பொருளாதாரம்தான் தீர்மானிக்கிறது.தீர்மானிக்கிற பொருளாதாரத்தைதான் என் கதைகள் பேசுகின்றன.

காதல்,அன்பு,பரிவு உள்ளிட்ட உணர்வுகளை வெறும் காசு பண பட்டுவாடா உறவாக்கி மனிதர்களை தன்னலத்தில் ஆழ்த்தும்  பொருளாதாரத்தின் குணத்தைப் பற்றியப் புரிதலை, எளிய மனிதர்கள் மீதான படர்த்தும் பேரன்பை,தனியுடைமை சமுகத்தை பகடி செய்யும் படைப்பாளுமையை எதன் வழியாக விந்தன் பெற்றிருக்க இயலும்? முற்போக்கு,இடதுசாரி நூல்களை பரிச்சயம் செய்ததிலிருந்தும் தான் வாழ்ந்த சுற்றுசூழலின் தாக்கங்களிலிருந்தும் அல்லாமல் வேறு எதிலிருந்து கற்றிருக்க இயலும்?

வறிய வர்க்கத்தில் பிறப்பதனாலேயே ஒருவரின் மனம் பகுத்தறிவையோ அறிவியல் பாங்கையோ பெற்று விடுவதில்லை.உலகம்-நாடு-மாநிலம் இதை ஒட்டிய கேள்விகள் முரண்பாடுகள் மட்டுமே உடனடியாக ஒருவரின் மனதை திருப்பி வைக்க இயலாது.வட்டாரம்-ஊர்-பகுதி சார்ந்த ஒருவரின் வாழ்நிலை அனுபவங்கள் பெறுமானங்கள்;இயக்கங்கள் மனிதர்கள் அவர்களில் வெளிப்படும் எச்சங்களை சொந்த பெறுமானங்களிலிருந்து ஒப்பீடு செய்கிற பொழுது உரசிப் பார்க்கிற பொழுது மனம் உண்மையைத் தேடுகிறது.பொய்யை வெறுக்கிறது.உண்மை துலங்கும் இடங்களை மனிதர்களை எழுத்துகளை கண்டடைகிறது.

அன்றைய சென்னையின் இன்றைய வடசென்னையின் சூளை பட்டாளம் விந்தன் வாழ்ந்த ஊர்.இந்தப் பகுதி மாநில அரசியலின் மையமான பகுதி;போராட்டங்களின் மையமான பகுதியுமாக இருந்தது.பக்கிங்காம் கர்னாடிக் மில்,ட்ராம்வே கம்பெனி,ரயில்பெட்டி தொழிற்சாலை,பேசின் பிரிட்ஜ் அனல்மின்நிலையம்,புளியந்தோப்பு ஆயுதக் கிடங்கு,சென்னை நகராட்சி மாளிகை,நவீன அச்சுக்கூடங்கள் என்று சூளையைச் சுற்றி  ஜவுளித் தொழில்,மின்சாரம்,அச்சகம்,ஆயுதம்,போக்குவரத்து சார்ந்த சாலைகள் இருந்தன.திரளான உதிரித் தொழிலாளர்களும்  தம் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

திரு.வி.க, வி.சர்க்கரை செட்டியார்,செல்வதி செட்டியார்,கஸ்தூரிரங்க அய்யங்கார்,பி.பி.வாடியா,வ.உ.சி, ப.ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி,கே.முருகேசன்,கே.மாணிக்கம் போன்ற தொழிலாளர் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உடன் நின்று போராடி கனன்றிருந்த ஊரில்தான் விந்தன் குடியிருந்தார்.
இந்தப் போராட்டங்கள்  அனைத்தும் விந்தனின் அரசியல்,சமுக,பண்பாட்டு சிந்தனையை வளர்க்க பயன்பட்டிருக்கின்றன.இந்தப் பகுதி மக்களின் மூச்சும் பேச்சுமாய் இருந்த கருத்துகள் விந்தனின் ஆளுமையை செதுக்கியிருக்கின்றன.இதற்கு அவரின் வேலைநிறுத்தம் ஏன் என்கிற நூல் மிக முக்கிய ஆவணமாகும். இது 1946 ல் நடைபெற்ற எழுச்சிகள், போராட்டங்கள்,தேசத்தை உலுக்கிய சம்பவங்கள்,பொருளாதார சீர்குலைவு,சமுக முரண்பாடுகளை அலசும் அரசியல் கட்டுரை நூல்.
 
கள ஆவணம்
இதன் முதல் கட்டுரை போலீசார் உள்ளிட்டவர்களின் வேலைநிறுத்தம் குறித்தது.அதன் தொடக்கம் இப்படி இருக்கிறது:
இன்று எங்கு நோக்கினும் வேலைநிறுத்தம்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.பஸ் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.ரயில்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.டிராம்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
இன்னும் சர்க்கார் சிப்பந்திகள்,தபால் இலாக்கா ஊழியர்கள்,ஹோட்டல் பாட்டாளிகள்,,நகரச்சுத்தி தொழிலாளிகள்,துறைமுகத்தை சேர்ந்த கூலிகள்,எதிலும் சேராத ரிக்‌ஷாவாலாக்கள் இவர்களோடு சேர்ந்து எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்னும் முதுமொழிக்கு பாத்திரமான உபாத்தியாயர்களும்கூட வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
அந்த பொல்லாத போலீசார் இருக்கிறார்களே அவர்களுக்கும் கூடவா கடமையும் பொறுப்பும் இல்லாது போய்விட்டன.

ஆனாலும் என்ன அந்த எதிர்பாராத அதிசயம் ஒரு நாள் நடந்துவிட்டது
அன்று போலீசார் வேலைநிறுத்தம் செய்ததோடு இல்லாமல் தாங்கள் அத்தனை நாளும் பெற்று வந்த அதி மர்மமான சம்பள விகிதத்தையும் அம்பலப்படுத்தி,சர்க்காரின் மானத்தை வாங்கி விட்டார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?
சில சுயநலவாதிகள் சொல்வது போல தொழிலாளிகளின் அவசரப் புத்திதான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?முடியாது! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதியும்,முதலாளி வர்க்கத்தின் பேராசையும்தான் மேற்கூறிய வேலைநிறுத்தங்களுக்கு காரணம் என்று சொல்ல வேண்டும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டிற்கு முன் விடுதலைக்கான மிக முக்கியமான எழுச்சியைப் பற்றி விந்தன் எழுதியிருக்கிறார்.இந்தப் போராட்டங்கள் அனைத்தும் 1946 காலக்கட்டத்தில் நடந்தது.இந்த ஆண்டில் பம்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தல்வார் என்ற போர்கப்பலின் சிப்பாயிகள் வேலைநிறுத்தம் செய்தார்கள்.பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை கீழே போட்டு விட்டு,காங்கிரசின் மூவர்ணக் கொடி,முஸ்லிம் லீக்கின் பிறைக்கொடி,கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை கைகளில் ஏந்தியவாறு வீரசுதந்திரம் வேண்டி வேலைநிறுத்தம் செய்தார்கள்.

இந்த கிளர்ச்சியை காங்கிரஸூம் லீகும் ஆதரிக்கவில்லை.கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்,இவர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்து,நாடு தழுவிய முறையில் வேலைநிறுத்தங்கள்,ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.இந்தியாவின் தட்பவெட்பம் மாறிவிட்டது;ராணுவம்,போலீஸ் கிளர்ச்சி செய்வதால் இனி இந்தியாவை ஆள இயலாது;அதிகாரத்தை இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான காங்கிரஸ்,முஸ்லீம் லீகிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேறுவது சரி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவெடுத்து,பின் வெளியேறியது.

பிரிட்டிஷ் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு முக்கிய நிகழ்வாக இருந்தது,இந்த கப்பற்படை எழுச்சி இவர்களை ஆதரித்து நாடு தழுவிய முறையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்.சென்னையிலும் மிக வலுவாக இந்த போராட்டக்கள் நிகழ்ந்தது.இதைத்தான் விந்தன் முதல் கட்டுரையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
போராட்டங்களை ஆதரித்து அதன் நியாயப்பாடுகளை ஆதரித்து பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகளை அம்பலப்படுத்தி நூல் முழுவதும் பேசியிருப்பார்.இந்த கள அனுபவம் வாழ்வு அனுபவம் விந்தனின் எழுத்துகளில் முற்போக்கை, எந்தப் பக்கத்தில் நிற்பது என்கிற தெளிவை தந்திருக்கிறது.

தொடர்ந்து இந்த பாதையில் முன்னேறிச் செல்வதில் அவருக்கு நிகழ்ந்த பலவீனம் பொருளாதார ரீதியிலான சரிவில் தொடங்கியது என்றாலும்,இயக்கம் சாராத படைப்பாளியாக கலாநிதி சிவத்தம்பி சொல்வது போல`சுயேட்சையான போக்கு கொண்டவராக விந்தன் இருந்ததனால்அடுத்தக் கட்ட நகர்தலிற்கான தடுமாற்றம் இருந்தது.படைப்பின் நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான, இயக்கத்தின் தத்துவ வெளிச்சத்தோடு கூடிய சுயேட்சை அணுகுமுறையை விந்தன் கைக் கொள்ள விரும்பவில்லை.
எனினும் த.ஜெயகாந்தன் சொல்வது போல `தொழிலாளி வர்க்க எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டும் தான்என்கிற தொடக்ககால கம்பீர அடையாளம் விந்தனுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
ஆதார நூல்கள்:
1)தோழர் விந்தன்:தமிழ்ச்சமுக இயக்கத்தில் விந்தனின் ஆளுமை-பேராசிரியர் வீ.அரசு
2)விந்தன் கதைகள்:தொகுப்பு-மு.பரமசிவம்
3)பாலும் பாவையும்-விந்தன்
4)மனிதன் இதழ் தொகுப்பு-மு.பரமசிவம்
5)கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-மார்கஸ்,ஏங்கெல்ஸ்
6)வேலைநிறுத்தம் ஏன்?-விந்தன்
7)தமிழ்நாட்டுத் தொழிற்சங்க இயக்கம்-என் நினைவுகள்-பி.ராமமூர்த்தி
8)விந்தன் இலக்கியத் தடம்-மு.பரமசிவம்
9)ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்-ஜெயகாந்தன்
சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம்

(2014 ஜூன் 26 அன்று, சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து எடுத்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)