Monday, May 30, 2016

புலரியின் முத்தங்கள்

 சென்னையில் நடைபெற்ற மனுஷ்யபுத்திரனின் புலரியின் முத்தங்கள் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்விற்கு  ( 2016 மே 29 )போனேன். கவிதை குறித்தும் அதை யாத்த கவிஞரின் பார்வைகள் நுட்பங்கள் சார்ந்து உரைகள் கேட்க அத்தனை சுவையாய் இருந்தது. தமிழின் நவீன கவிதை சார்பான ஒரு படைப்பாளியின் புதிய தொகுப்பை முன் வைத்து வெவ்வேறு பார்வையில் உரையாடல்கள் நிகழ்ந்தது பாராட்டுக்குரியது. நிகழ்வின் முடிவில் நிறைவுரை ஏற்புரை என ஏதும் இல்லாமல் இருந்ததும் சிறப்பு. ஒவ்வொரு உரை முடிந்த பின்பு நிகழ்வின் தொகுபாளர், உரையில் தெறித்த வரிகள் பார்வைகள் ஊடாக, கேள்வியைத் தொடுத்து, அதன் ஒவ்வொன்றிற்கும் மனுஷ்யபுத்திரனிடம் பதில்கள் கேட்டு சொல்ல வைத்தது புதியதாயும் ஒரு கவிஞரின் பல்வேறு பரிமாணங்களை அவதானிக்கவும் உதவியது. அரசியல் சார்பு தேவையா என தொடுக்கப்பட்ட கேள்விக்கு மனுஷ் மிக அழகாக பதில் சொன்னார். “

 எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.நாம் உணர்ந்த அரசியலை விடவும் உணராத அரசியலின் அடர்த்தி இங்கு அதிகம் . எவர் ஒருவருக்கும் அரசியல் சார்பு தேவையானதே. அது கூட குறைய இருக்கலாம்.எனினும் அரசியல் அவசியம் என்று பேசி, இதற்கு அப்பால் தான் அரசியல் அழுக்கு படாத சுயம்பு என்று பேசுவதெல்லாம் சரியல்ல  “ என்று கச்சிதமாகப் பேசினார். இரவு பத்து மணி வரையிலும் கவிதை சார்பான நிகழ்வு நடப்பதும் அமர்ந்து கேட்பதும் தமிழின் கவிதைக்கு நல்ல காலம் இதுவென்றே சொல்லலாம்.
” என் கவிதைக்குள் நீ உள்ளே வரும் பொழுது
நீ என்னை நோக்கி வரக்கூடிய
எல்லாக் கதவுகளையும்
நான் கருணையற்று அடைத்து விடுகிறேன்.”
-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment