Wednesday, April 15, 2015

குண்டர்கிராஸ் மறைந்தார்





குண்டர் கிராஸை நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவேன்.அப்பொழுது கிராஸ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.தாய்மொழி ரீதியிலான புரிதல் மட்டுமே அறிவை கலையாற்றலை வளர்க்க இயலும்;ஆங்கிலத்தினால் அன்று என்று அவர் கொடுத்த பேட்டி வழியாக அவர் மீதான் ஆர்வம் அதிகரித்தது.

ஜெர்மனி சார்ந்த நாவலாளர்-விமர்சகர்-கலைவிமர்சகர் எனும் பன் முகம் கொண்டவர் கிராஸ்.நோபல் பரிசு வெற்றியாளரும் கூட.எனினும் இஸ்ரேல் ,  பாலஸ்தீனர்கள் மீதும் ஈரான் மீதும் கொடும் ஆயுதத் தாக்குதலை-அணு ஆயுத மோதலை உருவாக்கிய 2006 களில் கிராஸ் கேட்ட கேள்வி `நாம் என்ன சொல்ல வேண்டும்?’

இந்தத் தலைப்பின் கவிதை இஸ்ரேலை அச்சப்படுத்தியது;அமெரிக்காவை எரிச்சல் செய்தது.எனினும் கிராஸின் கவிதை உலகம் முழுவதுமுள்ள சமாதானப் பிரியர்களுக்கு பெறும் உற்சாகத்தை தந்தது.

கவிதை எனப்படுவது யாதெனின் என்று நுரைத் தள்ளப் பேசுபவர்கள் குண்டர்கிராஸ்  எழுதிய இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.

ஜெர்மனியின் லுபெக் நகர வீட்டில் தன் 87 ஆம் வயதில்   இலக்கிய பரிசோதனை எனும் நூலிற்கான பணியில் இருந்த பொழுது,  13 ஆம் திகதி மறைந்திருக்கிறார் கிராஸ்.

Sunday, April 5, 2015

ஸர்மிளாவின் சிறகுகள்







தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவிதை இலக்கியத்திற்கான 2012 ஆம் ஆண்டின் செல்வன் கார்க்கி நினைவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கவிதைத் தொகுதி “சிறகு முளைத்த பெண்“.

விருதுநகரில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விருதை ஏற்க முடியாமல் போன கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் அண்மையில் சென்னை வந்தபோது எம்மைத் தொடர்பு கொண்டார்.

அவகாசம் கொடுத்து வந்தால் ஒரு சிறிய இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். எனினும் குறுகிய நேரத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு , ஆசிரியர் தினத்தன்று புத்தகம் பேசுது அலுவலக மாடியில் நிகழ்ந்தது.

 சைதை ஜெ,கி.அன்பரசன், மயிலை பாலு,ஜேசுதாஸ் போன்ற தோழர்கள் பல வேலைகளில் மாட்டிக் கொள்ள, கருப்பு தேநீர் தந்து மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி வறவேற்க, இலக்கிய செய்திகள் பறிமாற்றத்தினூடாய் எழுத்தாளர் ஜாகிர்ராஜா புன்முறுவல் காட்ட, பிறகு கருப்பு பிரதிகள் நீலகண்டனும் குவர்னிகா யாழ்ப்பாண மலரோடு வந்து சேர்ந்து கொள்ள அறிவிக்கப்படாத ஒர் இலக்கிய சந்திப்பு அங்கே நிகழ்ந்தேறியது. 

அதற்கு முன், தமுஎகசவின் கவிதைக்கான 2012 ஆம் ஆண்டின் விருதிற்கான ரூபாய் ஐந்தாயிரத்தோடு படைப்பாளர்களின் விருதுக் குறிப்பேடை மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.தெ.முத்து, மாநிலக்குழுவின் சிறப்பு அழைப்பாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவும் இணைந்து வழங்கினர்.


தீர்க்கமான அறிவும் கள அனுபவமும் இலங்கை குறித்த தரவுகளோடு கிண்டலும் கேலியும் கொண்ட முப்பது வயது ஸர்மிளா ஸெய்யித் ஊடகத்துறை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்திட்டமொன்றில் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பணியாற்றியது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புடன் இயங்கியது போன்ற அனுபவங்கள் தனது பல கவிதைகளின் வாசலாகவும் களமாகவும் இருந்திருக்கிறது என்றார். 

ஈழத்தில் பெண் படைப்பாளிகள் குறித்துத் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து எழுதும் பெண் படைப்பாளிகளில் தமிழகத்தில் பெருதும் கவனத்தைப் பெற்ற கவிஞர்களாக அனார்,பஹிமா ஜஹான் இருவரையும் குறிப்பிடலாம். இவர்கள் தவிர்ந்த பெண்படைப்பாளிகளே ஈழத்தில் இல்லை என்று அர்த்தமில்லை. பல பெண் படைபாளர்கள் உள்ளனர். 

அவர்கள் தமது அவசங்களை மட்டுமின்றி  விவசாய, கூலிப் பெண்கள் பற்றியும் எழுதுகிறார்கள். சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் நடத்தும் ”பெண்” சஞ்சிகை, மேலும் மலையகத்தில் இருந்து வரும் சில சஞ்சிகைள், கொழும்பைத் தளமாகக் கொண்டு வரும் ”கோசம்,” ”சொல்” போன்ற சஞ்சிகைள் பெண்களுக்கு களம் தருகின்றன. மலையகத்தில் பெண்கள் குறித்த பல சஞ்சிகைகளும் வருகின்றன என்றார்.


`அங்கு இப்போது சாதி முரண்பாடுகளின் நிலவரம் எப்படி இருக்கின்றது?’என கேட்க ` இன்றைய சூழலில் எங்களுக்கு சாதி முரண்பாடுகளை விட, எம் மீதான இனப் பாரபட்சமும் பெரும்பான்மை சமூகத்தின் அழுத்தங்களுமே ஆகப் பெரிதாக இருக்கின்றது’ என்றார்.

இலங்கையிலுள்ள இசுலாமியர்களின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்படுவதில்லை என்றும் அவர்களது பிரச்சினைகள் தேவைகள் ஊடகங்களால் புறக்கணிப்படுகின்றன என்றும் வருத்தம் தெரிவித்த அவர், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இலங்கை இசுலாமியர்கள், தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு அளித்த பங்களிப்புகளும் தியாகங்களும் இன்று முற்று முழுதாக மறக்கடிக்கப்பட்டுள்ளதுடன், இசுலாமியர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் வெறும் துன்பியல் நிகழ்வுகள் என்பதாக மட்டுமேயாகி புறக்கணிப்படுவது கவலையளிப்பது என்றார்.

 பேரின சமூகத்தினால் இன்று இசுலாமியர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பலசேனா என்கிற சிங்கள தீவிரவாத அமைப்பின் திட்டமிட்ட நடவடிக்கைகள் இசுலாமியர்களை அச்சமடையச் செய்வதாக உள்ளது. இசுலாமியர்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வணக்கஸ்தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பல்வேறு விதமாக தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றும் கூறினார்.

போர் முடிவடைந்த பின்னரும் நிலவுகின்ற நம்பிக்கை அற்ற அரசியல் அரங்கு காரணமாக எம் படைப்புகளில் நம்பிக்கையின்மை இருக்கிறது; இது படைப்பாளிகளின் குறைபாடு கிடையாது; சூழலே காரணம் என்றார்.

உங்கள் படைப்புகள் எப்படி அறியப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு

 தனக்கான முதல் அங்கீகாரமே தமுஎகசவின் இந்த கவிதை விருதுதான் என்றவர். ”சிறகு முளைத்த பெண்” தொகுப்பைப் பற்றி கவிஞர் சமயவேல், குட்டிரேவதி, இளைய அப்துல்லாஹ் போன்றோர் எழுதி இருக்கின்றனர்

இலங்கையில் பி.பி.சி. வானொலியில் நான் அளித்த நேர்காணல் சர்ச்சைக்குப் பின்னர் முன்பை விடவும் நான் அதிகம் அறியப்பட்டதனால் எனது கவிதைகளும் அதிகம் பேரால் படிக்கப்பட்டது, விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் தனிநபர்களின் திட்டமிட்ட தாக்குல்களாக என்னை நோக்கி வந்ததினால் சில பின்னடைவுளுக்கும் சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது என்பதாகவும் ஸர்மிளா ஸெய்யித் பகிர்ந்து கொண்டார். விரைவில் தனது நாவல் ஒன்று வெளிவரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிறியதாகத் திட்டமிட்ட சந்திப்பு ஒரு நிறைவான இலக்கிய நிகழ்வு போன்றே 

நிறைவடைந்தது. மாலை ஆறு மணியாகிவிட ”தனியாகப் 

போய்விடுவீர்கள்தானே, என்றதற்கு `தோழர் இவ்வளவு தூரம் வந்த எனக்கு 

இருக்கிற இடத்திற்கு போகத் தெரியாதா, என்று ஒரு பஞ்ச் வைத்து

கலகலவென்று சிரித்து நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்