Tuesday, November 12, 2013

சங்க காலத்தை மீட்டிய சஹ்ருத வேதி







தீபாவளிக்கு அடுத்த நாள் காலை சரியாக பத்தரை மணிக்கு பாலக்காடு மணிகண்டன் குழுவினரின் செண்டை மேளத்தோடு தொடங்கியது சஹ்ருத வேதி அமைப்பின் கேரளநாள் விழா.கேரள மாநிலம் உருவான நவம்பர் 1 ஆம் தேதியை முன்னிட்டு சகோதர மேடை என்கிற அமைப்பு இந்நாளை கலாச்சார விழாவாக  சென்னை அண்ணா ஆதர்ஸ் கல்லூரி அரங்கில் நடத்தியது.

பண்டிகை நாளில் அணியப்படும் வெள்ளை,மஞ்சள் சேலை உடுத்தி திரளான பெண்கள் கலந்து கொண்டிருக்க ,வேட்டி சட்டையோடு சில ஆண்களைப் பார்க்க ,பல ஆண்கள் பேண்ட் சட்டையோடு விழாவில் கலந்து கொண்டிருந்தார்கள்.அரங்கின் வாசலில் அழகான பெரிய கோலமிட்டு வறவேற்றார்கள்.

முழுநாள் விழாவின் மதியம் வரையிலான கொண்டாட்டத்தில் கவிசங்கமம் என்கிற கவியரங்கம்,ஓவியப் போட்டி,பாடல் போட்டி என இளைஞர்கள்,குழந்தைகளின் பங்கேற்பில் அரங்கு அழகானது.மாலை விழாவில் அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,தொழில் முனைவர்கள் என பலர் பங்கேற்றனர்.

காலை அமர்வில் முனைவர் ரவீந்திரராஜா,கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன்,இரா.தெ.முத்து,வி.பி.கங்காதரன்,வி.பரமேசுவரன் நாயர்,அமராவதி ராதாகிருஷ்ணன்,ஆர்.முகுந்தன்,சன்னி ஜான்,ஓவியர் சண்முகன் திருப்புணித்துரா போன்ற ஆளுமைகள் பங்கேற்றனர்.

ஈழத்தில் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் சிங்கள ரானுவத்தால் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மரணத்திற்கு விழா தொடக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கேரள அரசு விடுத்த வேண்டுகோள்படி தாய்மொழி காப்பு உறுதிமொழியை பின்னர் எடுத்துக் கொண்டனர்.

கவிசங்கமத்தை தொடங்கி வைத்த கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,மலையாள மொழி காலந்தோறும் நவீனப்பட்டு வருகிறது.புதிய நோக்கில் புதிய பார்வையில் படைப்புகள் வெளிவருகின்றன.முகநூல்,வலைப்பூக்களில் இப்படியான படைப்புகளை காணமுடிகிறது.நைரோபியக் கவிஞர் கோஃபி அவனுர் மொழியில் மக்களின் பாடுகள் வாதைகள் பதியப்பட வேண்டுமென்றதை நாம் கவனத்தில் கொண்டு புதிய சூழலிற்கேற்ப சென்னையில் வாழும் மலையாள படைப்பாளர்களும் தமது படைப்புகளை அளிக்க வேண்டுமென்றார்.

தமிழ்நாட்டு கவிஞர்கள் சார்பில் விழாவிற்கு அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றிய இரா.தெ.முத்து,தமிழுலகமும் அயல் உலகமும் கொண்டாடும் சங்க இலக்கியம்,காப்பியங்கள்,பதிணென்கீழ்கணக்கு போன்ற படையல்களை தந்ததில் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் தமிழோடு இணைந்திருந்த உங்கள் ஆதி வாழ்கைக்கும் அனுபவத்திற்கும் பங்குண்டு.இளங்கோவடிகள்,தொல்காப்பியர்,திருவள்ளுவர்,அவ்வை,அதங்கோட்டாசான் போன்ற படைப்பாளிகள் உங்களுக்கும் சொந்தமானவர்கள்தான்.

தமிழும் மலையாளமும் இன்று உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தின் பாதிப்பிற்கு உள்ளாகி கொண்டிருக்கிறது.மலையாளத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைப் போல,தமிழைக் காக்க தமிழ் படைப்பாளர்களும் தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம்,மாநாடு என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இனம்,மொழி,வர்க்க உணர்வோடு இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் வாழ அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன் நிற்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து நிகழ்ந்த கவிசங்கமத்தில் கிரேஸ் நெல்சன்,அய்யப்பன் காரியத்,சரோஜினி ஜெயதேவன்,தாமஸ் வண்ணப்புரம்,கலா.எஸ்,செருதுருத்தி ராதாகிருஷ்ணன்,ஆஷா சசிகுமார்,காஞ்சனா அரவிந்த்,டவ்டன் மோகன்,மன்மதன் மாவேலிக்கரா என பங்கேற்று சங்கக் கவிமரபின் ஓசையோடு கவிதை பாடியது,அனைவரையும் சங்க காலத்திற்கே இட்டுச் சென்ற உணர்வை 
அளித்தது.
 தொகுப்பு:கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,கிரேஸ் நெல்சன்