Friday, July 19, 2013

அவமதிப்பிற்கு ஆளான வாலி





++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++
படம்{கவாஸ்கர்}

வெள்ளி நிலவே விளக்காய் எரியும்
 கடல்தான் எங்கள் வீடு
-வாலி

கவிஞர் வாலி இன்றில்லை என்றாகி நம் நினைவுகளில் மட்டுமே இனி இருப்பார் என்றாகி விட்டார்.வாலியின் எழுத்துகளில் எளிமையின் வசீகரமும்   மொழின் துள்ளலும்  அடர்த்தியின் நளினமுமாக இருக்கும்.தொடர்ந்து ஐம்பதாண்டு காலமாக எழுதி வந்தவர்;புதிது புதிதாக சொற்களை எடுத்து இயங்கி வந்தவர்.1961 மேஜர் சந்திரகாந்தில் ஆரம்பித்து 2013 ன் கூத்தாடிகள் வரை திரைப்படம் வழியாக காதல்,தத்துவம்,மகிழ்ச்சி,துன்பம்,அரசியல்,எழுச்சி என தமிழ் தொட்டு தொடர்ந்து வந்தவர் வாலி.பதினைந்தாயிரம் பாடல்களில் விதவிதமான ரசரசமான வரிகளை காற்றில் உலவ விட்டவர்

 .சிக்கல் இல்லாத சிடுக்கு இல்லாத வரிகளை நெய்யும் ஆற்றல் கொண்டவர் .இவரின் வரிகளால் எம்.ஜி.ஆர் அரசியலில் தனது கருத்துகளை அழுத்தமாக அழகாக சொல்ல முடிந்தது.தொடர்ந்து திரைப்படத்தில் இயக்கி வந்ததோடு,அச்சு ஊடகத்தில் கவிதை,கட்டுரை,பத்தி எழுத்து,சொல்லோவியம் என கவனம் காட்டியவர்.மத்திய ,மாநில அரசுகளின் விருதுகள் பெற்றவர்;தமிழகத்தின் ஐந்து முதல்வர்களை அறிந்தவர்;பழகியவர்.அன்பின் முகத்தோடு யாவரிடமும் இருந்தவர் என்று வாலி உணரப்பட்டாலும் அவருக்கான அவர் தமிழுக்கான மரியாதையோடு அவரின் இறுதி அஞ்சலி நடைபெறவில்லை.

திரை உலகம் சார்ந்த சிலர் அவருக்கு அஞ்சலி செய்தாலும்,வாலியின் ரசிகர்கள்,சக படைப்பாளிகள் வாலியின் இறுதி நேரத்தில் பார்த்து  விடை கொடுக்க இயலவில்லை.வாலியின் இடம் தமிழில் என்னவாக இருக்கிறது என்று அவரின் சொந்த உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவரின் வரிகளால் வளர்ந்த திரைஉலகம்,படைப்பாளிகள்  வாலியின் இறுதி அஞ்சலியை ஒழுங்கு படுத்தி,அனைவரும் காண உதவ முன் வந்திருக்க வேண்டும்.குறிப்பாக அவரோடு நெருங்கிப் பழகிய கலைஞர் கருணாநிதி, வைரமுத்து,இளையராஜா,கமல்ஹாசன்,சங்கர் போன்றோர் இதை ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

திரை உலகத்தின் உண்மை முகத்தை பார்த்து வந்த வாலியின் உறவுகள்,திரைஉலகத்தின் மீதான விமர்சனத்தை திரைஉலகத்தினரிடம் வெளிப்படுத்தாமல்,இறுதி அஞ்சலி செய்ய வந்த கவிஞர்கள்,பொதுமக்களிடம் வெளிப்படுத்தியது வருத்தமாக இருந்தது.மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு என தெரியப் படுத்தி,ஒன்றறை மணிக்கு எடுத்ததோடு இல்லாமல் ,அஞ்சலி செய்ய வந்த பொது மக்களை அஞ்சலி செய்ய விடாமல் தடுத்து அனுப்பியது வாலிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகும் என்பதை வாலியின் குடும்பத்தாரோ அல்லது திரைஉலகமோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து கொட்டும் மழையில் பெசந்து நகர் மின்மயானம் வரை சென்ற இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக கலந்து கொண்டோர் இருநூறு என்கிறார் கவிஞர் பாரிகபிலன்.தலை சிறந்த ஒரு கவிஞரின் இறுதிப் பயணம் நிகழ்கிறது என்ற எந்த உணர்வும் இன்றி முகம் தெரியாத ஒருவரின் பயணம் போல சாலையில் போனது கொடுமை.ஒரு நீதிபதி கார் வந்தால் வழி கொடுக்கும் காவல்காரர்கள்,ஓர் அமைச்சர் கார் வந்தால் விலக்கி வழி தரும் போக்குவரத்து காவல்துறையினர் வாலியின் ஊர்வலத்தில் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடலான அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடிய முதல்வர் ஜெயலலிதா, தனது தலைவரான எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கு தனது பாடலால் உதவிய  கவிஞருக்கு அஞ்சலி செய்ய கொடநாட்டிலிருந்து வந்து போயிருந்தால்  மரியாதையாக இருந்திருக்கும்.அதுவும் இல்லை;ஒ.பன்னீர்செல்வம் போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் வழியாக அஞ்சலி செய்திருக்கலாம் தமிழ்நாட்டு அரசு.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு படைப்பாளி,ஒரு கலைஞர்,ஒரு கல்வியாளர்  இறந்தால் மாநில அரசு ,இறந்தவருக்கு  மரியாதை செய்து,இறுதி விடை கொடுக்கிறது.

ஆனால்  பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு வணக்கம் செய்ய  வந்த வைரமுத்து,பாக்யராஜ்,மேத்தா,பா.விஜய்,கபிலன் போன்ற  சொற்ப கலைஞர்களுக்கு ஒர் அஞ்சலி உரை நிகழ்த்தி,வாலிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனதை  ஏதும் அறியாதவர்கள் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் என்று எடுத்துக் கொள்வதா?

மனசு உடுத்தின கவலைத் துணி
அவிழ்த்து எறி எதற்கு இனி

-வாலி