Sunday, October 23, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-9


பாரதியை சீண்டும் ஜெயமோகன்

பாரதியின் மொத்தக் கவிதைகள் 268 என்று பேராசிரியர் அரசு தன்னுடைய குயில் பாட்டில் பாரதியின் கருத்து நிலை என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.இதில் பாடல்கள்,கவிதைகள்,வாழ்த்து பாக்கள், என அனைத்தும் அடக்கம் . பாரதி தன் சமகாலத்திய இந்திய,உலக இலக்கியப் போக்குகளின் மீது கவனம் பதித்திருந்ததை அவனது கட்டுரை தொகுப்பை படிக்கிற போது அறிந்து கொள்ள முடிகிறது.மு.ராகவையங்கார் வழியாக சங்க மரபை அறிந்து அதைப் பற்றிய அயயங்கார் உரையை இந்தியா பத்திரிகையில் பெருமகிழ்வோடு வெளியிடுகிறான்..நீதி நூல்கள்,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,ஆண்டாள்,வள்ளலாரின் படைப்புகள்,நாட்டார் இசை மரபுகள்,செவ்வியல் இசை மரபுகள்,இதிகாச,பஞ்சதந்திர மரபுகள் என பலவற்றிலும் கவனம் கொண்டு கற்று தன் படைப்பை மிளிரச் செய்திருக்கிறான் பாரதி.

 பொது வாழ்வும்,இலக்கிய வாழ்வுமான தன் 16 ஆண்டுகளை அடக்குமுறை,அச்சுறுத்தல்,புலம் பெயர்தல்,வறுமையான வாழ்க்கைப் பாடு என கழித்ததன் ஊடாகவே தன் படைப்பை நவீன தமிழ் மொழிப் பரப்பில் விட்டுச் சென்றிருக்கிறான்.அடிமை இந்தியாவை விடவும் ஆசுவாசமான தற்காலத்திய சூழலில் வாழ்ந்து கொண்டு ,ஊடக பெருக்கத்தின் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வலைப்பூ கச்சேரி செய்யும் ஜெயமோகன்கள் இக்கவிதை மேன்மையினை  சரியாக உணர முடியாது.இவர் தனது வலைப்பக்கத்தில் பாரதி அந்தகாலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன் மட்டுமே இதைத்தாண்டி மகாகவி என அவனை சொல்ல வாய்பு இல்லை காரணம் அவனிடம் அசல்தன்மை கிடையாது;நகல் கவிஞன் என்ற ரீதியில் எழுதிச் செல்கிறார்.

  அமைப்புகளில் செயலாற்ற மறுக்கும் தூய வெற்றுலக்கிய சார் தன்னல நபர்களைப் போல் அன்றி ஒரே நேரத்தில் அமைப்பாளனாகவும் படைப்பாளனகவும் இருக்க வேண்டிய தேவையில் விடுதலை அரசியலுக்கான களமாக தன் படைப்பை பயன்படுத்துகிறான் பாரதி.இதற்கு ஆண்டாளின் திருப்பாவை,தொண்டரடிப்பொடியாள்வாரின் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல உத்திகளையும் கைக் கொள்கிறான்

திசைகள் எங்கும்  சூரியனின் ஒளிக்கதிர்கள்  சுடர்கின்றன.நட்சத்திரங்களின் ஒளியும் குறைந்து சந்திரனும் மயங்கி விட்டான்.விலகிய இருளினூடாக கமுகு மடல்களைக் கீறிக் கொண்டு சுகந்த காற்று வீசும் அதிகாலைப் பொழுதில் துயில் கலைவாய் திருவரங்கனே என பெருமாளுக்கு வேண்டுகோள் விடுக்கும் மரபைத் தள்ளி வைத்து விட்டு,பெருமாள் இருந்த  இடத்தில் சுதந்திரதேவியை முன்வைத்து அவளுக்கான திருப்பள்ளி எழுச்சிப் பாடுகிறான் பாரதி.இப்பள்ளி எழுச்சியில் வேண்டுகோள் கிடையாது.ஆணை,அதட்டல்,கோபித்தல் என சமயவடிவ ஊடாக சமய மறுமலர்ச்சியையும் விடுதலை உணர்வினையும் முன்னெடுக்கிறான்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிக்  கவிதை 40 அடிகளில் எழுதப்பட்டிருக்கிறது.நாங்கள் செய்த தவத்தால் இருள் விலகி பொற்சுடர் பரவி பொழுது புலர்ந்த காலையில் பல்லாயிரம் தொண்டர்கள் உன்னை வணங்கக் காத்திருக்கிறோம்.பறவைகள் பறக்க,முரசங்கள் ஒலிக்க எங்கும் சுதந்திர சங்கு ஒலிக்கிறது.அறிவாளர்களும்,பெண்களும் உன் பெயர் சொல்லி காத்திருக்க ,  உன் காலடியில் அணிவிக்கும் பொருட்டு எங்கள் இதய மலர்களை கொய்து வைத்திருக்கும் எங்கள் ஆவலை நீ அறிவாயா?பலகாலம் பற்பல தவங்கள் செய்து ஏழைகள் நாங்கள் காத்திருக்க இன்னும் உனக்கு உறக்கமா?விதவிதமான பதினெட்டு மொழி பேசும் மாநிலங்களை உடையவளே குழந்தைகள் நாங்கள் எழுப்புகிறோம்  பள்ளி எழுந்தருளாயோ? என்பதில் பல செய்திகளையும் விரவித் தருகிறான் பாரதி.

இந்தக் கவிதையை  வாசிக்கிறபோது செய்யுளில் யாத்தக் கவிதை என்பதற்கும்  அப்பாற்பட்டு மனத்திரையில் ஒரு பெரிய சித்திரத்தை தீட்டிக் காட்டி ,.தீட்டப்படும் சித்திரத்தின் ஊடாக விடுதலைப் பற்றாளர்களின் மனதை கிளர்ச்சியுறச் செய்து விடுதலைப் போரை மேலும் மூண்டெழச் செய்யும் உத்தி இது.காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகள்,திருடர்களுக்கு அச்சத்தை தரும் பொருட்டும் சுய அச்சத்தை தணிக்கும் பொருட்டும் பாடப்படும் வழிநடைப்பாட்டு போலவும் ,போர்க் காலங்களில் படைகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு பாடப்படும் படை நடைப்பாட்டு போலவும் இந்த சித்திரிப்பு வாசிப்பின் போது உற்சாகம் தருகிறது. இது ஒர் அமைப்பாளன் செய்ய வேண்டிய பணி.நம்பிய கொள்கை தளைக்கும் பொருட்டு அணிகளை உற்சாகப் படுத்த வேண்டிய, தரவுகளைச் சொல்லி போராட்டத்தை கூர் தீட்டவேண்டிய தலைவனின் பணியைச் செய்தான் பாரதி.

அரசியல் களத்திலும்,பண்பாட்டுக்  களத்திலும்(இதன் உட்கூறான கவிதை உட்பட) மாற்றம் நிகழ்த்த இயங்குவோர் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றிய
புரிதலை தன்  மாநிலம்,தேசம்,சமூகம்,உலகம் நடந்து வந்த பாதைகளின் ஊடாகவும் அந்தந்த கால கட்டத்திய ஆளுமைகளின் படைப்புகள்,கண்டுபிடிப்புகள்,வரலாறுகள் வழியாகவும் திரண்ட அனுபவத்தை பெற்று இதன் வழி புதிய பாதையை,புதிய உத்தியை கண்டடைவது காலம் தோறுமான மானுடர்களின் பணி.இதைத் தாண்டிய அகமனத் தேடல், எதன் ஒன்றினும் பாதிப்பு இன்றி சுயம்புவாக உணர்தல்தான் அசல் என்று கதைப்பது தன்னை சமூகத்திலிருந்து தனியாக பிரித்துப் பார்க்கின்ற எதிரரசியல் போக்கு.வரலாற்றை,அறிவியலை மறுக்கின்ற மாயாவாத,வேதாந்த போக்கு.ஜெயமோகன் வ்ழிமொழியும் இந்தப் போக்கை அன்றே எட்டி மிதித்தவன் தான் மகாகவி பாரதி.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி கவிதையில் 
      வீதியெ லாம்அணு குற்றனர்  மாதர்
தெள்ளிய அந்தணர்  வேதமும்,நின்றன்
    சீர்திரு  நாமமும் ஓதிநிற் கின்றார் “

இதில் அந்தணர் என்பதை இன்றைய அடையாள அரசியல் நோக்கில் பார்க்காமல்,அறிவாளிகள் என பார்க்கிறார் பாரதி.நவீன தமிழகத்தின் விழிப்பின் முன்னோடியாக செயற்பட்ட சுதேசமித்திரன்,இந்து பத்திரிகை அதிபரும்,பாரதிக்கு உற்ற துணையாகவும்,வழிகாட்டியாகவும் இருந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்,வழக்கறிஞர் துரைசாமி அய்யர்,பெண்விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நீதிபதி ச்தாசிவ அய்யர் , விடுதலைப் போரில் ஆணுக்கு நிகராய் பெண்களின் பங்களிப்பை உணர்ந்து அமைப்பை முன்னெடுத்த அன்னிபெசண்ட், மங்களாம்பிகை போன்றோர்களை மனதில் கொண்டே மேற்கண்ட வரிகளை வடிவமைத்திருக்கிறார் பாரதி. 

கடைசி அடியில்”
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
      மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
      வேண்டியவாறு உனைப் பாடுதும்  காணாய் 

மொழிவாரி  மாநிலம் என்ற கோரிக்கையை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு 30 ஆண்டுகள் முன்னரே பாரதி தன் கவிதையில் இதைப் பதிந்திருக்கிறான். மரபுகளிலிருந்து பெற வேண்டியதைப் பெற்று  அதன் போதாமைகளை புதிய தேவைகளிலிருந்து நோக்கி தன் காலத்திய அரசியல் களத்தையும்,இலக்கிய உலகத்தையும்  ஒரு சேர வளர்த்தவன் பாரதி.புதியதும்,புதிய மரபும் பழைய மரபின் சாரத்திலிருந்தே தன்னை வளர்தெடுக்க இயலும் என்பதை நாம் பாரதி போன்றவர்களின் கவிதைமரபினூடாக புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்கிறோம்*  

(2011 அக்டோபர் 24தீக்கதிர் இலக்கியசோலையில் பிரசுரமானது}

Monday, October 17, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-8


 

படைப்பில்  எரிந்த தீ


வேள்வித்  தீ என்றொரு பாடல் 80 அடிகளைக் கொண்டதாக இருக்கிறது. ரிசிகள் வளர்த்த வேள்வித்தீயில் அசுரர்கள் அலறித் துடிப்பதாக,போக்கிடம் இன்றி பொசுங்கிப் போவதாக , வானை நோக்கி கைகள் தூக்கி வளர்கிறது தீ என்பதை மேலோட்டமாக வாசிக்கிற போது வேள்வித்தீயில் அசுரர் மடிவதாகவே புராண ரீதியில் பொருள் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

பாரதியின் கவிதைகளில்,பாடல்களில் தீ குறித்த புனைவுகள் அதிகமாக வருகின்றன..இந்தத் தீ குறித்து பாரதி கவிதைகளை முன் வைத்து அந்தக் காலம் முதல் பல விளக்கங்கள் சொல்லப்பட்டும் வருகின்றன.பாரதியும் தன் கட்டுரைகளில் தீ பற்றி பேசியிருக்கிறான். அது ருத்ரன் என்கிற சிவன் என்றும்,சிவமைந்தன்  அல்லது தேவசேனாதிபதி எனப்படுகிற முருகன் என்றும் மற்றொன்று தத்துவார்த்த நோக்கில் அறிவை,உள்ளத்தை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும் ஒளி என்றும் வீரம் என்றும் எழுதிச் செல்கிறான். பாரதி தன் படைப்புகளில் தத்துவார்த்த நோக்கிலேயே தீயை,வெம்மையை,ஒளியை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறான்.பாரதியைப் பொறுத்த அளவில் செயல்பாட்டிற்கான


 உந்து  விசையாக அவனின் தத்துவப்  பார்வை செயற்பட்டிருக்கிறது.
வேள்வித்  தீ பாடலில் ரிசிகள் வளர்க்கும் தீயினால்,பங்கமுற்று   பேய்கள் ,அரக்கர்கள் ஓடுகிறது என்றும்   எமனும் இல்லாத பகையும்  தீமையும் இல்லாத அமர வாழ்க்கை வருகிறது என்றும் பதியப் பட்டுள்ளது. இதே பாடல் அசுரர் பார்வையில் வாழ வந்த காடு எரிகிறதே என்றும், காட்டின் மக்களை வலுவில்லாதவர்கள் என்று நினைத்தோமே என்றும் உயிரை விட்டு உணர்வை விட்டு ஓடி வந்த இடத்தில் துயில் கொள்ளும் உடல் மீதே தீ கவ்வுகிறதே என்றும் புலம்புவதாக படைக்கப்பட்டுள்ளது இந்த சித்திரிப்பை பார்க்கிற போதே இது வழக்கமான அசுரர்/ரிசிகள் பாடல் இல்லை என தெரிய வரும். வழக்கமான நெய்யூற்றி வளர்க்கும் வேள்வி இல்லையெனவும் புரிய வரும்.இங்கு அசுரர் என்போர் இந்தியர்களை காலனிய ரீதியில் ஆண்டு முடித்த வெள்ளையர் என்றும் ரிசிகள் யாரென சொல்ல வேண்டியதில்லை.விடுதலைக்காக போராடிய தீரர்கள்,மக்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஏனையப் பாடல்கள் போல இந்தப் பாட்டின் வெளிப்பாட்டுத்  தன்மையில் வெளிப்படை உத்தியை பாரதி கைக் கொள்ள வில்லை ..பாஞ்சாலி சபதம் போலவும்,குயில் பாட்டுப் போலவும் இந்தப் பாட்டிலும் ஒரு பூடகம்,ஒரு படிமம் வைத்து மக்கள் மொழியில் சொல்வதானால் பொடி வைத்து பாடி இருக்கிறான்.அழகியல் சார்ந்த உத்தி மட்டும் அல்ல இது. அன்றைய பிரிட்டிஸ் ஆட்சியின் தணிக்கை தொல்லையிலிருந்து படைப்பை பாதுகாத்து மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய அரசியல் உத்தியும் ஆகும்.

பாரதி கல்வி  குறித்து எழுதினாலும்,மொழி மேன்மை முன்னிட்டு எழுதினாலும்  சுதந்திரப்பயிர் பற்றி  கவலைப் பட்டாலும், வ.உ.சி /விஞ்ச உரையாடல் என எது பற்றி எழுதினாலும் வெள்ளை அரசு நடுங்கியது.அரசாங்கப் பார்வையில் பாரதி ஒரு வெடிகுண்டு;ஒரு கிளர்ச்சிக் காரன் என்பதால் அவனின் பல பாடல்கள்,கவிதைகளை  சுடச் சுட அரசாங்கம் மொழிப் பெயர்த்து அவனை கன்காணிப்பிற்கு உள்ளாக்கியது;பாரதியின் பல பாடல்கள் தடை செய்யப்பட்டன;வழக்குகளில் அவைகள் வெள்ளையர்களால் ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டன. கலைக்டர் ஆக்ஷ் கொலைவழக்கு பற்றிய நீதிபதி சங்கரன் நாயர் தனது தீர்ப்பில் பாரதியின் இப்படியான பாடல்கள்,வ.உ.சி., சுப்பிரமணியசிவா வின் உரைகள் ஒரு பகை மோதலை உருவாக்கியதின் அடிப்படையில் ஆக்ஷ் கொலை நிகழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

முறையான அமைப்பு  உருவாக்கப்படாததின் ஆரம்ப  நாட்களில் இப்படியான சுதந்திரப் போரட்ட தீரர்கள்,படைப்பாளிகள் தம் நெஞ்சுரம் சார்ந்து இயங்க வேண்டிய சூழலில் பலதை வெளிப்படையாகவும் மேலும் பலதை மறைமுகமாகவும் செய்ய வேண்டிய கட்டாயம் சார்ந்து அவர்களின் செயல்பாட்டுப் பணிகளும்,படைப்பும் இருந்தன.இந்தப் பின்னணியில் வேள்வித்தீ பாடலை,அதன் உத்தி,வெளிப்பாட்டு முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பாடல்கள் நெடுக தீ வளர்க்கும் ரிசிகள்  ஆனந்தக் களிப்பில் மிதப்பதாக ,காடெல்லாம் பற்றி எரிவதாக சொல்லப்பட்டிருக்கும்.இங்கு தேசத்தின் குறியீடாக காடு சொல்லப்பட்டுள்ளது.1908 ல் நாடு முழுவதும் ஆங்காங்கு நடைபெற்ற வீறு கொண்ட இயக்கங்கள்.தொழிலாளர் வேலைநிறுத்தங்கள்,தீவிரவாதச்செயல்கள் மிதவாத பெட்டிசன் காங்கிரசுக்கு எதிரான புதியக் கட்சியின் தலைமையான திலகர்,விபின்சந்திரபாலர்,அரவிந்தர்,வஉ.சி,பாரதி,சுரேந்திரநாத் ஆர்யா,சக்கரை செட்டியார் போன்ற தலைவர்களுக்கு பெறும் உற்சாகத்தை தருகின்றன.இந்த அரசியல் உத்வேகத்தின் கலை வெளிப்பாடுதான் இந்தப் பாடல்.

ரிசிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில் 
          ஏறுதே தீ தீ-இந்நேரம்
        பங்கமுற்றே பேய்களோடப்
          பாயுதே தீ தீ

அசுரர்:  தோழரே,நம்  ஆவி வேவச்
          சூளுதே தீ தீ-ஐயோ நாம்
        வாழ வந்த காடு வேவ
          வந்ததே தீ தீ-அம்மாவோ
 இப்படியாக  பாடல் போகும்.

அக்கினி குஞ்சொன்று கண்டேன் –அதை
   அங்கொரு  காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
   வீரத்தில்  குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
      தத்தரிகிட தததரிகிட தித்தோம்

இந்தக் கவிதையிலும் மேற்சொன்ன கால இயக்கத்தின் பிரதிபலிப்பு உண்டு. செயல் வீரத்தை குறிப்பிட வரும் போது அதில் முதிர்ந்த வீரம்,இளைய வீரம் என்றெல்லாம் இல்லை.மொத்தத்தில் வீரம் எனச் சொல்ல வரும் பாரதி குறிப்பாக இளைய வீரத்தை அதன் களச்செயலை பார்த்து பூரித்து ஆனந்த கூத்தாடி வழிமொழிகிறார். இந்த அக்கினி குஞ்சாக ஆக்ஷை வீழ்த்திய வாஞ்சி, மாடசாமி; நெல்லை சீமையினூடாக சென்னை ராஜதானியை கலக்கிய ஹார்வி மில்,கோரல் மில் தொழிலாளர்கள் வரத்தான் செய்வர்.இதைத்தானே பாடினான் பாரதி.

Sunday, October 9, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-7



 தீவிரம்  கொண்ட அரசியற் புனை கவிதை

பாரதியின் கவிதைத் தொகுப்பில் சத்ரபதி  சிவாஜி என்ற நீள்கவிதை உள்ளது.185 வரிகள் கொண்டது.தன் படை  வரிசைகளுக்கு சிவாஜி, தேசம்  குறித்து அன்னியர் ஆபத்து பற்றி போரில் வீரர்களின் தீரம் சொல்லி,வீரகர்ஜனை செய்வதான கவிதை இது.இங்கு சிவாஜி குறித்தோ,அவனின் ஆட்சி முறை குறித்தோ நாம் இங்கு பதிவது அவசியம் அல்ல.பாரதி பார்வையில் சிவாஜி ஒரு மாவீரன். அடிமை இந்தியாவின் மக்கள் எழுச்சியுற வேண்டும் என்ற நோக்கில்  சிவாஜியை முன்வைத்து பாரதி புனைந்த கவிதை இது.

ஆனால் புனைவில் நனவின் தீவிரம் பற்றி எரிகின்றது.கவிதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கட்டுக்கடங்காத காட்டுக் குதிரையின் புழுதி பறத்தும் வேகம்.அடிப்படையில் இது ஒர் அரசியல் கவிதை. காலனீய ஆட்சி சூழலில் நவீன இந்தியா குறித்தும் அதன் விடுதலை குறித்தும்  தீவிர மொழியில் பேசிய கவிதையின் அரசியல் வாசிக்கும் எவரையும் சூடேற்றும் தன்மை கொண்டது.

இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் அல்லது எழுதிப் பார்க்கும் அரசியல் கவிதையின் ஆரம்ப புள்ளி பாரதி.பாரதிக்கு 12 ஆண்டுகள் முன் வாழ்ந்து மறைந்த வள்ளலாரும்,வள்ளலாருக்கு முன் வாழ்ந்த அய்யா வைகுண்டசாமிகளும் .வள்ளுவரும் அரசியல் பற்றி எழுதி இருக்கிறார்கள்.வைகுண்டர் தவிர வள்ளலாரும் வள்ளுவரும் ஆட்சியாளர்களைப் பற்றி சில வரிகள் தீவிரமாக எழுதி இருக்கிறார்கள்தான்.ஆட்சியாளர்களை நோக்கி தீவிரம் பேசிய கவிதைகள் பல வைகுண்டரும் எழுதி இருக்கிறார்.

ஆனால் பாரதி  வாழ்ந்த காலம் போர்க்கருவிகள் குவித்து உலகின் பல பாகங்களை ஆங்கிலேயர் கொள்ளை  அடித்து குவித்த ஏகாதிபத்தியக் காலம்.புதிய சூழலில் ஆட்சியாளர்களுக்கு உபதேசம் செய்யும் முறையிலோ,ஊழ் வந்து உறுத்தும் என சாபம் இடும் பாணியிலோ அரசியல் கவிதைகள் இருக்காது.

முறையற்ற  ஆட்சியை எதிர்த்து கலகம் செய்வதை சொல்லித் தருகிறது அரசியல் கவிதை.மக்கள் சந்திக்கும் பிரச்சனையின் புள்ளியை கவிதையின் மையமாக்கி ஆட்சியின் மையத்தை தகர்ப்பது ஒரு நல்ல அரசியல் கவிதையின் லட்சணம்.அரசியல் கவிதை வெற்று முழக்கமாக இருக்காது.அழகியல் ஊடாடி சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் என வார்த்தையை வேலாக வடிப்பது இதன் லட்சணம்.

இந்த அரசியல்  கவிதையாக சத்ரபதி சிவாஜி கவிதை இருக்கிறது.பாரதி தான் வாழ்ந்த காலத்தில் உள்ளுர்,வெளியூர் இதழ்களை வாசிக்கும் ஒரு பத்திரிகையாளனாக,அரசியல் தலைவனாக,மொழியியல் வல்லுனனாகவும் இருந்தான்.மக்களுக்கு நெருக்கமாக கவிதை மொழியை
எளிய முறையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.மேற்கத்திய,கீழை தேசத்திய,இந்தியக் கவிதைகள் குறித்து பாரதிக்கு அறிமுகம் இருந்தது.அதன் பாதிப்பில் பல கவிதைகளை புனைந்திருக்கிறான்.

உண்மையான  கவிதை அருமையான திரவியம் என்றும் அதனால் உலகம் சேமத்தை அடைகிறது என்றும் கவிதையில் தெளிவு,ஒளி,தண்மை,தடையில்லாமல் பாய்ந்து செல்லும் ஒழுக்கம் தேவை என்றும் பிறர் துன்பத்தைக் காணும் போது தனது துன்பம் போல் கருதி வருந்தும் இயல்புடைய ஒருவனும்,பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்து கவிதை செய்யப் பழகுவராயின் முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்;பிந்தியவன் பதங்களைப் பின்னுவான் என்றும் பாரதி கவிதைக்கு சொல்லியது அப்படியே அரசியல் கவிதைக்கும் பொருந்தும்.

குறிப்பிட்ட சிவாஜி கவிதை “ஜயஜய பவானி  ஜயஜய பாரதம்”  என ஆரம்பிக்கிறது.

”எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்!
 யாவிரும்  வாழிய யாவிரும் வாழிய
பாரத பூமி பழம்பெறும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்
மொக்குகள் தோன்றி  முடிவது போல
மக்களாய்  பிறந்தோர் மடிவது திண்ணம்
தாய்த்திரு  நாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்
சோதரர் தம்மை  துரோகிகள் அழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
தேசமே நலிவோடு  தேய்ந்திட மக்களின்
பாசமே பெரிதெனப்  பார்ப்பவன் செல்க
நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும்  மாமகம் புரிவம்யாம்”

என்று  சொற்களைப் பின்னிப் பின்னி பாரதி கவிதையாடிய சொற்சிலம்பம் இன்றும் நம் அரசியல் கவிதைக்கு தேவைப்படுகிறது.இந்தக் கவிதையில் புரிதல் சிக்கல் இல்லை.தெளிவான வானம் போல  பளிச்சிடுகிறது கவிதை.அதே நேரத்தில் துரோகிகள் நம்மை அழிக்கும் போது காமத்தில் கிடப்பவன் போயொழியட்டும் என்றும்,தேச நலனை விட அதன் விடுதலையைவிட தன் பெண்டுப் பிள்ளைகளின் மீதான பாசம் கொள்பவனும் போருக்கு தேவையில்லை விலகிப் போகட்டும் என்றும் மனதில் வேகம் ஏற்றி இலக்கு நோக்கி சொல்லாயுதம் பாய்ச்சுகிறான் பாரதி.

90 ஆண்டுகளுக்கு  முந்தைய தேவைக்கு பாரதி  பாடிய  கவிதை இன்றைய ஏகாதிபத்திய உலமயச் சூழலிலும் இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு தேவைப்படுகிறது.இந்த 21 ஆம் நூற்றாண்டில் நம்மில் எவர் பாரதி?பாரதி பாடிய அதே வரிகளை நகல் செய்யாமல் அதன் சொற்தளத்தில் காலூன்றி விசையுறு நவசோதிக் கவிதைகளை நம்மில் யார் செய்குவர்?


(தீக்கதிர் இலக்கியச் சோலையில் 2011 அக்டோபர் 10 பிரசுரமானது)

Monday, October 3, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-6


அன்பு மனதின் கொதிக்கும் சுவடி




பாரதியின் புதிய ஆத்திசூடி,11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒளவையின் ஆத்திசூடி,கொன்றை வேந்தன் பிரதியை விட
பொருளில்,சொற்சேர்க்கையில் தனித்துவமிக்கது;ஆளுமைத்திறன்
வாய்ந்தது.பழைய ஆத்திசூடி இரண்டு,இரண்டு சொற்களாகவும் கொன்றைவேந்தன் நான்கு நான்கு சொற்களாகவும் அமைக்கப்பட்டிருக்கும்
ஒளவையின்  ஆத்திசூடி நிலவுடைமை நோக்கு சிந்தனை கொண்ட,ஆளும் வர்க்கத்திற்கு அனுசரணையான,பெண் குறித்த பழமைவாத நோக்கு கொண்ட,தனிமனித ஆளுமை சுதந்திரத்திற்கு எதிரான எழுத்து
.
ஆறுவது சினம்,சுளிக்க சொல்லேல்,தையல்சொற் கேளேல்,போர்த்தொழில் புரியேல்,முனைமுகத்து நில்லேல்,வல்லமை பேசேல்,ஊருடன் கூடிவாழ் இப்படி  108 வரிகளாக பாடி இருப்பார்.கொன்றை வேந்தனும் உண்டி சுருங்குதல் பெண்டிற்க்கு அழகு,பேதமை யென்பது மாதர்க் கணிகலம்,ஒதார்க்கில்லை உணர்வோடு ஒழுக்கம் என நீள நீளமாய் பேசிப் பெண்களை ,சமூக வளர்ச்சியை நுகத்தடியில் கொண்டு போய் பூட்டும் வேலையாகும்

தொழிற்மயமாதல்,புதிய  தொழிலாளர் திறள் உருவாகும்  சூழல்,சனநாயக சிந்தனை உருவாகிய 19 ஆம் நூற்றாண்டின் இறுதி தொட்டு 20 ஆம் நூற்றாண்டின் இரு தசாப்தம் காலப் பின்னணி கொண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி இயல்பாகவே புதிய நோக்கில்,புதிய தொனியில் பாடப்பட்டன என்றாலும்,பாரதி என்கிற தலைகீழ் மாற்றம் கோரிய விடுதலைவீரரின் நோக்கு அதிரடியானது.;விடுதலையை பெற எழுத்தை ஓர் ஆயுதமாக பயன் படுத்தும் பார்வை கொண்டது.

கேட்டிலும்  துணிந்து நில்,சீறுவோருக்கு சீறு,தாழ்ந்து நடவேல்,தையலை உயற்வு செய்,நேர்பட பேசு,பாட்டினில் அன்பு செய்,போர்த் தொழில் பழகு ,முனையிலே முகத்து நில் என 229 எழுத்துகளுக்கு 130 எழுத்துகளின் முதல் எழுத்தை கொண்டு வெவ்வேறு பொருளில் பாடியவர் பாரதி.ஒளவையின் பல பார்வைகளை மறுத்து ,ஜனநாயக யுகத்திற்கு தேவையான மாற்றங்களை தன் எழுத்தில் நேர்ந்தவர்.

இயல்பான அன்பு  நோக்கு கொண்ட பாரதி எல்லா உயிரும் நேசிக்கத் தக்கன என்ற சமநோக்கு பார்வையும்,அனைத்தும் ப்ராசக்தி மயம் என்கிற ஆன்மீக நோக்கும் கொண்டவரால் ஒரு கழுதைக் குட்டியின் மீதும் நேசம் கொள்ள முடிந்தது.

”அச்சமில்லை” பாட்டில் இப்படி ஒரு வரி வந்து அச்சமற்ற மனநிலையையும்,அன்பு மனதையும் காட்டி நிற்கும். “நச்சை வாயிலே நண்ப ரூட்டும் போதிலும் அச்சமில்லை,அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
 “ பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே”என்ற பாட்டில்
“தின்ன வரும்புலி  தன்னையும் அன்போடு
சிந்தையிற்  போற்றிடுவாய் நன்னெஞ்சே”

இப்படியான நேசம் கொண்ட கவி மனசு புதிய ஆத்திசூடியில் கொதிக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள்:ஒன்று அன்பு கொண்ட மனம் அடிமைத்தனத்திற்கு எதிரானது;கட்டுப்படாதது;கட்டுப்படுத்தாதது.இரண்டு காலபரப்பில் தமிழை முன்னிலை படுத்துவது. முன்னோர் சொற்களை சரியாக மீள்பயன்பாடு செய்வதும்,தேவையின் பொருட்டு மீறி ,மீறலில் இருந்து புதிய சொற்களை ,புதிய பார்வைகளை கண்டடைவதும் ஆகும்.

எட்டபுர மன்னர் வெங்கடேசு ரெட்டப்ப பூபதி  பார்வைக்கு கொடுத்தனுப்பிய ஓலைதூக்கில் பாரதி சொல்லி போகிறான்:
“தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர்  தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்ததன்றே”

இந்த தன்னம்பிக்கை,மொழிஆளுமை,தொடர்ந்து  வரும் அறிவியல் மரபை புரிந்து கொண்ட நுட்பம் காரணமாக புதிய ஆத்திசூடி உள்ளிட்ட புதிய புதிய படைப்புகளை எழுத பாரதியைத் தூண்டியது.
(அக்டோபர் 03 தீக்கதிர் இலக்கியச்சோலையில் பிரசுரமானது)

Saturday, October 1, 2011

சென்னை அருகே கற்கால அகழ்வு

சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் 1லட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த
கற்கால மனிதர்கள் குறித்த அகழ்வாராய்ச்சியின் படம் 

இராசராசன் கல்வெட்டு

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் பின் புறமுள்ள ராசராசன் பங்களிப்பு குறித்த கல்வெட்டு

த.மு.எ.க.ச மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 12 ஆம் மாநில மாநாட்டில் தேர்வான புதிய நிர்வாகிகளை நந்தலாலா (துணைத் தலைவர்)அறிமுகம் செய்கிறார்
படத்தில்:ச.தமிழ்செல்வன்(தலைவர்)சு.வெங்கடேசன்(பொதுச்செயலர்)எஸ்.ஏ.பெருமாள்(துணைத்தலைவர்)இரா.தெ.முத்து(துணை பொதுச்செயலர்)அருணன்(கெளரவத் தலைவர்)