Monday, December 5, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 14

பிறிதொரு வாசலைத் திறந்த மழை

பாரதியின் தனிப்பாடல் திரட்டில் காணப்படும் பாடல் மழை.இடி,காற்று,மின்னல்,மழையை வார்த்தைப் படுத்தி இருக்கிறான்.வார்த்தைபடுத்தல் என்பது ஐம்பெரும் ஆற்றலில் ஒன்றான நீர் அல்லது அதன் இன்னொரு வடிவமான மழை நிமித்தமான நிகழ்வுகளை அதே வேகத்தில்,அதே தோற்றத்தில் வார்த்தையில் காட்சிப்படுத்துவது ஆகும்;பாடலை படியுங்கள்: 

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
   தீம்தரிகிட  தீம்தரிகிட தீம்தரிகிட  தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
   பாயுது  பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
   சாயுது  சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது  காற்று-தக்கத்
   தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட 

வெட்டி யடிக்குது  மின்னல் கடல்
   வீரத்  திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
   கூவென்று  விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட  சட்டச்சட டட்டா-என்று
   தாளங்  கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
   எங்ஙனம்  வந்ததடா தம்பி வீரா 

அண்டம் குலுங்குது தம்பி-தலை
   ஆயிரந்  தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக்  குதித்திடு கின்றான்-திசை
    வெற்புக்  குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
    தெய்விகக்  காட்சியைக் கண்முன்பு  கண்டோம்
கண்டோம் கண்டோம்  கண்டோம்-இந்தக்
    காலத்தின்  கூத்தினைக் கண்முன்பு  கண்டோம்  

என்ன மழைக்கு  போய் ஒரு கவிதையா?ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும் போது இந்த பாரதி இப்படியெல்லாம் பாட வேண்டுமா?என சிலர் கேட்கலாம்.ஆனி,ஆடி சாரல்;ஐப்பசி,கார்த்திகையில் மழை அல்லது அடடா அடடா அடைமழைடா என்று சொல்லி விட்டுப் போகலாமே?எதற்கு இந்த 24 வரிகளை வீண் படுத்த வேண்டும்?இது மொழியை மேம்படுத்துவது;மானுடத்தின் அனுபவ சாரத்தை,இயற்கைக்கும் தனக்குமான உறவாடலை மொழியில் இறக்கி பதப்படுத்தி அடுத்த தலைமுறைக்குத் தருவது;கலைசித்திரமாக்குவது என்பது வாழ்க்கையின் பிறிதொரு வாசலை திறந்து தன் இருப்பை நிரூபிப்பதின் ஊடாக மொழிபரப்பில் கவிதையின் பரப்பை வண்ணமாக்குவது மானுட வாழ்வின் அடுத்த நகர்விற்கும் அவசியமானது. 

வான் சிறப்பு குறித்து வள்ளுவன் எழுத வில்லையா?நீர் இன்றி அமையாது உலகு என்று மட்டுமா சொன்னான்? ”விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது” என்பதன் வழி மழைத்துளி மண்னில் விழவில்லை எனில் புல்லின் நுனியைக் கூட பார்க்க இயலாது என்பதில் ஒரு புதுக்கோலம் வரைந்து காட்டுகிறானே வள்ளுவன். 

மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும் என்று  சிலப்பதிகாரத்தின் மங்கல  வாழ்த்தில் மழையை பெருமைப் படுத்தி இருக்கிறானே இளங்கோ. 
திருநெல்வேலி  விறல்புலவர் எழுதிய முக்கூடற்பள்ளுவில் மழைவரும் அடையாளத்தைச் சொல்லும் போது,”ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி-மலை
யாள மின்னல்  ஈழ மின்னல்
சூழ மின்னுதே 
நேற்று மின்றுங் கொம்பு சுற்றிக்
காற்ற டிக்குதே” என்று மலையாள மின்னலையும் ஈழமின்னலையும் மரக்கொம்புகளில் சுழன்றடிக்கும் காற்றையும் நாம் பார்ப்பது அனுபவ அழகின் சொற்கோலமல்லவா?. 

.வடிவத்தில்,வார்த்தை அடுக்கில்,காட்சிப்படுத்தலில்.முக்கூடற்பள்ளு வரிகளைத் தவிர மழை பற்றிய கவிதைகளுக்கும பாரதியின் மழைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.பாரதியின் கவிதை வரிகளில் உக்கிர பெரும் வெள்ளம்,பேயைவிட மதம் பிடித்த ,வானத்தை குடையும் காற்று,குலுங்கும் திசைகள் என ஒரு பெறும் காட்சியை எழுப்பிக் காட்டுகிறான். 
விண்னை இடிக்கும்  வீரக்கடல் அலைகளை இதன் பேரெழுச்சியை வார்த்தைகளில் மட்டுமின்றி ஜதி வழியாகவும்,தாளங்கள் வழியாகவும் அவன் பார்த்த காலக் கூத்தினை ஆடிக் காட்டுகிறான்.

தீம்தரிகிட,தக்கத் ததிங்கிட,தாம்தரிகட, இவைகள் தாளக்கருவிகளை வாசிக்கும் சொற்கட்டு.இந்த சொற்கட்டு இன்றி வாசிக்கவும் முடியாது;தாளம் இன்றி பாடவும் இயலாது;நடனத்தில் அடவுகள் போட்டு ஆடவும் சாத்தியம் இல்லை. 
மழை கவிதை  பெரும் எழுச்சியை சுட்டும் கவிதை என்பதால் தாள சொற்கட்டை  தன் வரிகளின் எழுச்சிக்கு,மனம் சுட்டும் ஆவேசத்திற்கு அவன் வரிகளிலேயே சொல்வது எனில் சுருள் சுருளாகவும்,பின்னலாகவும் இணைத்துக் காட்டுகிறான்.மழை எங்ஙனம் வந்ததடா என வீராவிடம் கேட்கிறான்.(வீரா என்பவர் புதுச்சேரி வாசி)காலத்தின் கூத்தினை கண் முன் கண்டேன் என்றும் சொல்கிறான்.இந்தக் கவிதையின் கடவுச்சொல்லே இந்த வரிகள் தான்.கவிதை 1916-1917 வாக்கில் எழுதப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு  உலக அளவிலும்,இந்திய அளவிலும் கொந்தளிப்பான காலம்.ருசியபுரட்சி வெற்றி பெற்ற கார்த்திகையில் எழுதப்பட்டுள்ளது.தேச அளவில் காங்கிரசிற்கு மாற்றான புதுப் புது புரட்சிஅமைப்புகள், இதன் சார்பில் விடுதலைக்குப் போராடும் இளைஞர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழும் பாரதியை உசுப்புகின்றது.புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டு காலத்தில் நேரடியாக பாரதி எழுத இயலாத பிரிட்டிஸ் அரசின் ஒடுக்குமுறை இருந்த காலம்.அதே சயம் விடுதலை குறித்து தனக்கான கருத்துகளை சமரசம் செய்யாமலேயே வாழ்ந்தான்.இதன் தெளிவுகளை பிரிட்டிஸ் தொழிற்கட்சி தலைவர் ராம்சே மக்டோனல்ட்டிற்கு பாரதி எழுதிய கடிதத்தின் வழி அறியலாம். 

1916-1917 மழை காலத்து நேர் அனுபவத்தை ,தான் நேர்பட நேர்ந்த சமகாலத்து அரசியல் பதிவுகளோடு இணைத்து பெரும் எழுச்சிமிக்க கவிதையாய் நம் முன் அரசியலோடும்,அழகியலோடும் வைத்த இந்த தீம்தரிகிட மழை கவிதைக்கு நேராய் இன்று வரை தமிழில் வேறோரு மழைக் கவிதை கிடைக்கவில்லை

2 comments: