Tuesday, September 27, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி -5


அரசியல் பண்பாட்டுப்  போராளி



இருபத்தோராம்  நூற்றாண்டின் சுயநலமிக்க உலக மயமாக்கல் சூழலில்  வாழ்கிறவர்கள் , கொடுமையான இருபதாம் நூற்றாண்டின்  முதல் இருபது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்து போன பாரதியைப் பற்றி எவ்விதம் ஞாபகம் கொள்வார்கள்?
வாழத் தெரியாதவன்;ஊரோடு ஒட்டிப் போகாதவன்;கிறுக்கன்;குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டவன் ;அரசாங்கத்தோடு மோதி அழிந்து போனவன் இப்படித்தான் நினைவு கொள்ள வாய்ப்பு அதிகம்.
இந்த நவீன காலத்தில் ஒரு அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர்,முதல்வர் இப்படியான ஆளும் வர்க்க தொடர்பு வட்டத்திற்குள் ஒருவர் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது,இதையெல்லாம் மக்கள் நலனுக்காக பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கை விட ,தன் நலன்,குடும்பநலன் போன்றவற்றை  முன்னிட்டே காய் நகர்த்தும் நோக்கு அதிகமிருக்கும்
முதலாளித்துவ  அரசுகள்  எப்போதும் மக்கள் நலனுக்கு குறுக்கே தான் நிற்கும் என்ற புரிதலோடு அரசை எதிர்த்தப் போராட்டத்தில் முன் நிற்க வேண்டும் என்ற புரிதல் கொஞ்ச பேருக்கே இருக்க பெரும்பாலோர் அமைச்சரின் அக்காள்,முதல்வரின் மகள் ,அல்லது முதல்வரின் தோழி தயவுக்காக நயந்து நிற்பபதோடு ,ஆளும் வர்க்கத்தோடு அண்டி நிற்பதையும் நாம் பார்க்கலாம்
எட்டயபுர  சமஸ்தான அதிபரோடு கிடைத்த நட்பை சரச,சிலேடை கவிதைகள் பாடி மகிழ்வித்து சுகவாழ்வு வாழும் சூழலுக்காக பயன் படுத்தாமல்  விட்டொழித்து,தன்நலன், குடும்ப நலன் பாராது தேசச் சூழலை முன் நிறுத்தி தேச விடுதலைக்காக இயங்கிய ஒர் அரசியல் பன்பாட்டுப் , போராளி பாரதி.
கலாநிதி சிவத்தம்பி எழுதுகிறார்:பாரதி முழு தமிழிலக்கியப் பாய்ச்சலிலும் குறிப்பாக  நவீன இலக்கியத்தில் முதன்மைப் படுத்தப் படுவது ,அவன் தமிழிலக்கிய ஓட்டத்தில் ஏற்படுத்திய மடை திருப்பமாகும்.அந்த மடை திருப்பம் காரணமாகவே இன்று நாம் சமூக-அரசியல் இயக்கங்களின் பரவலுக்கு இலக்கியத்தை இன்றியமையாத கருவியாக-சாதனமாக-ஊடகமாக கொள்கிறோம்.தமிழிலக்கியப் பரப்பில் பாரதி நிகழ்த்திய சாதனை சமூக-அரசியல் விமர்சனத்தை தமிழ் இலக்கியத்தின் பணி ஆக்கியமையாகும்.(கி.பார்த்திபராஜாவின் பாரதி நூலுக்கு முன்னுரை)
மேற்கண்ட இந்த அரசியல்,பன்பாட்டுப் பார்வைதான் திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரஸின் தமிழக பிரிவின் முன்னணித் தலைவரான பாரதியை ,தான் சார்ந்த குரு திலகரின் கருத்துகளை விடுதலைக் கனலை தமிழ் மண்னில் பரப்ப கவிதையை ஓர் ஆயுதமாக வார்க்கச் செய்தது.
பாரதி ஆழ்ந்த ஞானத்தோடு,தொலைதூரப் பார்வையோடு தன்னல மறுப்போடு எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பலபல இலக்கிய முயற்சிகளை கவிதை,கதை,கட்டுரை,கார்டூன்,நாடகம்,காவியம்,மொழிபெயர்ப்பு,இசைப்பாடல்,வாசகர் கடிதம் முன்னெடுக்கிறான்.
இவனின் வசனக்கவிதை தொகுப்பில் ”விடுதலை” எனும் பெயரில் இரண்டு காட்சிகளிலான நாடகம் இருக்கிறது.இந்திரன்,வாயு,அக்னி,சூரியன்,சில முனிவர்கள் என பாத்திரங்கள் வருகின்றன.
இந்திரன்:உமக்கு நன்று தோழரே
மற்றவர்:தோழா உனக்கு நன்று
இந்திரன்:பிரம்மதேவன்  நமக்கோர் பணியிட்டான்
மற்றோர்:யாங்ஙனம்?
இந்திரன்:மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளையெல்லாம்  சிதறுக என்று
அக்னி:வாழ்க  தந்தை;மானுடர் வாழ்க
மற்றோர்:தந்தை  வாழ்க தனி முதல் வாழ்க
உண்மை வாழ்க  உலக மோங்குக
தீது கெடுக,திறமை  வளர்க
என்று கவிதை  வளர்ந்து போகப் போக சூடேறி இந்திரன் சொல்லுகிறான்:
மண்ணுலகத்து மக்களே,நீவிர்
.....................................................
செயல் பல செய்வீர்,செய்கையில் இளைப்பீர்
.........................................................................................
தோழரென் றெம்மை நித்தமும் சார்ந்தீர்
நும்மையே  அவுணர் நோவுறச் செய்தார்
ஆஅ அ மறவுக் குறும்பா,அரக்கா
என விளித்து ஆங்கிலேய ஆட்சியை 
அரக்கரே மனித அறிவெனும் கோயிலை
விட்டுநீ  ரொழிந்தால் மேவிடும் பொன்னுலகம்

 இதில்  பாரதி கையாண்டிருக்கும்  மொழி எளிமையானது;வலிமையானது.இன்று  நாம் நமது படைப்புகளில்  எளிமையை கொண்டுவர முயன்று  நம்மை அறியாமல் புலமை  மொழியில் விழுந்து விட,நூறு ஆண்டுகளுக்கு முன்பே தான் சார்ந்த இயக்கத்தின் ,தலைவரின்  கருத்தை புராணத்தை மறுபயன்பாடு செய்து   கச்சிதமாக கலையில் இலக்கியத்தில் பயன் படுத்தி இருக்கிறான் பாரதி.
இந்திரன்  மூலம் பாரதி சொல்லும் செய்தி திலகரின் செய்திதான்.தோழர்  என்ற சொல்லை நவீன காலத்தின் பரப்பில் முன் வைக்கிறான்.நம்மை அவுணர் என்கிற அன்னியர்(பாரதியின் புதுச் சொல்) நோவுறச் செய்கிறார் எனச் சொல்லி ,நமது கல்வியை வெறும் ஆங்கில மொழி கற்கும் கல்வியாக ஆங்கிலேயர் மாற்றியதை பாரதி விமர்ச்சிக்கிறான் ;இதன் அடையாளம் தான் மனித அறிவெனும் கோயிலை விட்டு அன்னியர் ஒழிந்தால் பொன்னுலகம் வரும் என்கிற வரிகள்
குரு திலகரின் ,அவன் நேசித்த தந்தை திலகரின் கொள்கை தமிழ் மண்னில் பரவ,இதனூடாக  விடுதலை ஒளி பரவிட அரசியற்  கருத்துகளை இலக்கியத்தில்  பதிந்த முதல்வன்;முன்னத்தி  ஏர் நம் பாரதி.விடுதலை வேள்வியினூடாக தன் வாழ்க்கையை எரிதழலில் இடுவதற்கு அவன் அஞ்சவில்லை.இவ்வாறு அஞ்சுவோர் இந்த பணிக்கு தேவை இல்லை என்கிறான்.பலர் நினைப்பது போல் அவன் கிறுக்கன் அல்ல;விடுதலையை முன்னெடுத்த சித்தன்;தலைவன்.(செப்டம்பர் 25 தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியானது)

No comments:

Post a Comment