Sunday, August 14, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி -1

பாரதியின் தேச பக்திப் பாடல்கள் பலதும் நமக்கு பழக்கப்பட்டிருக்கிறது.இது போல அவரின் வசனக் கவிதைகள்,குயில் பாடல்கள்,கன்ணன் பாட்டு என பலதை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

நிறைய கடவுள் பாட்டும் பாடியிருக்கிறார்.இதனாலேயே அவரை பற்றிய மதிப்பீடு கீழிறங்கி இவர் ஆண்டவர்களை ஆமோத்திதவர்தானே?என்ற சொற்கள் வந்து விடுகின்றன.

ஆண்டவர்களை எப்படி பாடினார்?யாருக்காக பாடினார்? எதன் பொருட்டு பாடினார்?என்ற கேள்விகள் அவ்வளவாக வருவதில்லை.

அம்மனை பாடியதால் இவர் அழுகுணியா? மாரியைப் பாடினால் சோமாறியா ?இந்தப் பாடல்களை பாராமல்,பயிலாமல் விட்டு விடலமா?

இது படைப்புகளை மறுவாசிப்பு செய்கிற காலம்.நடப்பு தேவையின் பொருட்டு  பாடபேதம் நீக்கி பயில வேண்டிய காலம்.

மதம் நவீன காலத்திலும் அரசியலாக்கப்படும் போது,அதன் உள்ளிருந்து மதசகிப்பிற்காய் புது மொழியில் புது தொனியில் குரல்கள் வரவேண்டும்.

அவ்வாறு புதிய மொழியில் கடவுளரை பாடிய பாரதி மக்கள் சார்ந்தே பாடினார்;மக்கள் தேவை சார்ந்தே பாடினார்.

பக்தி பாடலில் கணபதியை பற்றி பாடுகிறர்:

”எனக்கு வேண்டும் வரங்களை கேட்பேன்
இசைப்பேன் கேளாய் கணபதி
என விளித்து,
கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்”
என்று பாடி போகிறார்

தன்னை கட்டுதல் கடமை என்கிறார்.
எதன் பொருட்டு இந்தக் கடமை?
பிறர் துயர் தீர்க்க பிறர் நலம் வேண்ட இந்தக் கடமை என்கிறார்

பாரதியின் இந்த தன் கட்டு என்ற சொற்பிரயோகம் அடர்த்தியானது

பிறர் நலம் காத்தல் பொருட்டு சண்டை வரலாம்;பிணக்குகள்
மூளலாம்.மத அடையாளம்,சாதி அடையாளம் தன்னை முன் நடத்த முயலலாம்.அப்போது குறுகிய சுய சாதி,சொந்த மத அடையாளங்களிலிருந்து  விலகி பொது நலனுக்காய் ஒரு படைப்பாளி,ஒரு சமூக ஊழியர் தன்னை கட்டுதல் அவசியம்

இப்படியாக தன் கட்டை விரித்துக் கொண்டே போனால் சமூகத்தின் சுய நலங்களிலிருந்தும்,இழிவுகளிலிருந்தும் நீங்குதல் என் போய் சேரலாம்.
இந்த சுயநலங்களையும்,இழிவுகளையும் மாற்றும் போரில் இலக்கு தவறாது மனதை ஒருவர் பொது நோக்கோடு பேணுதல் என்பதாகும்.
பாரதியே சொன்னது போல்,கச்சணிந்த மாதர் நம்மை இச்சைக் கொண்டு நோக்கினும் அச்சமில்லை,அச்சமில்லை என்றதும் இந்த சுயக்கட்டு தான்.

கணபதி வேட்டல் புதுமை வேட்டலாக,பொதுமை வேட்டலாக மாறி பேசாப்  பொருட்களை இப்படிப் பேசுகிறார் பாரதி!


29.08.2011 தீக்கதிர் இலக்கியச்சோலையில் வெளியானது.


No comments:

Post a Comment